Tuesday, July 03, 2012இலங்கை::வவுனியா சிறைச்சாலையில் கைதிகளால் சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டமை சர்வதேசத்தில் செய்தியை வழங்கும் பயங்கரவாத செயல் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது..
இதனை சர்வதேச தரப்பினர் உணர்ந்து கொள்ளவேண்டும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
இந்த சிறைக்கைதிகள் புனர்வாழ்வு பெற்று மீண்டும் சமூகத்துடன் இணைய வேண்டிய தருணத்தில் இவ்வாறான பாரிய பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை சிலர் அரசியல் கைதிகள் என்று கூறினாலும், சர்வதேசத்திற்கும், உள்நாட்டில் அவர்களுக்கு சார்பான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கும் ஒரு செய்தியை கைதிகள் வழங்கியுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ் அரசியல் தலைவர்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் கைதிகள் வவுனியா சிறைக்கூடத்திலிருந்து அனுராதபுரம், மஹர ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அந்த கைதிகளில் பலர் காயமடைந்து உள்ளதாகவும், உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள புலி சந்தேக நபர்கள் சர்வதேச தொடர்புகளை வைத்துள்ளனரா என்பது தொடர்பாக தாம் விசாரணை மேற்கொண்டுவருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment