Saturday, July 7, 2012

இலங்கை வீரர்களுக்கு நாட்டில் எப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது: ஜெ., திட்டவட்டம்!

Saturday, July 07, 2012
சென்னை::இலங்கை வீரர்களுக்கு, நாட்டில் எப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது,'' என, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ""இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி சென்று, சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெற வேண்டும். அதுவரை, பிற நாடுகளுடன் இணைந்து, இலங்கை மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது, மவுனியாக உள்ளது மத்திய அரசு. ஆனால், தமிழக மக்களை அவமானப்படுத்தும் வகையில், இலங்கையின் ஓன்பது விமானப் படை வீரர்களுக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை நிலையத்தில் பயிற்சி அளிப்பதற்கு ஏற்கனவே கண்டனத்தை தெரிவித்து இருந்தேன். தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், இதுபோன்ற செயல்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தேன். தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே கருத்தை தெரிவித்துள்ளன. 'தமிழர்களுக்காகவே பாடுபடுகிறேன் எனக் கூறும் தலைவர், அந்த செய்தி உண்மையானால், அது கண்டிக்கத் தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக திருப்பி அனுப்பவதே சரியாக இருக்கும்' என, பட்டும் படாமல் கூறியிருந்தார். எனினும், இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை, ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தாம்பரத்திலிருந்த ஒன்பது இலங்கை வீரர்களை, பெங்களூருவில் உள்ள, எலகங்கா விமான படைத் தளத்தில், பயிற்சி அளிக்க, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதன்மூலம், தமிழர்களுக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஐ.நா., சபை மூலம், "போர்க் குற்றவாளிகள்' என அறிவித்து, இலங்கை அரசு மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, தமிழக மக்களின் விருப்பம். இந்நிலையில், சென்னையில், இலங்கை வீரர்களுக்கு, பயிற்சி அளிப்பதை தவிர்த்து, பெங்களூருவில் பயிற்சி அளிப்பதை, தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். இலங்கை வீரர்கள் எவருக்கும், இந்திய மண்ணில், பயிற்சி அளிக்கக் கூடாது. அவர்களை, உடனடியாக நாட்டை விட்டு திருப்பி அனுப்ப வேண்டும் என, மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment