Saturday, July 7, 2012

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டாயமாகிறது : மினிமம் ரூ20 நிர்ணயிக்க திட்டம்!

Saturday, July 07, 2012
சென்னை::ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் கட்டாயமாகிறது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்பட பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், போக்குவரத்து தேவையும் அதிகமாகவே உள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆட்டோக்களுக்கு புதிதாக பர்மிட் வழங்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 10 ஆயிரம் ஷேர் ஆட்டோ, 54 ஆயிரம் ஆட்டோக்கள் என மொத்தம் 64 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இப்போது எந்த ஆட்டோவிலும் மீட்டர் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. டிரைவர்கள் சொல்லும் கட்டணம்தான் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கட்டண நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆட்டோ டிரைவர்களிடம் கடந்த மாதம் போக்குவரத்து துறை ஆணையரகம் பேச்சுவார்த்தை நடத்தியது. முக்கியமான ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் இதில் கலந்து கொண்டன. ஆட்டோக்களில் கட்டாயம் மீட்டர் பொருத்த வேண்டும். அதன்படிதான் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்தது.

பெட்ரோல் விலை அடிக்கடி உயர்கிறது. ஷேர் ஆட்டோக்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டால் குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும், கி.மீட்டருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றியமைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கைகள் பற்றி அரசுக்கு தெரிவித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் சேஷசாயன் கூறியதாவது: தற்போது பெட்ரோல் விற்கும் விலையில் பழைய கட்டணத்தின்படி எங்களால் ஆட்டோ ஓட்ட முடியாது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.14ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்த வேண்டும். அதேபோல கி.மீட்டருக்கு ரூ.6 என்பதை மாற்றியமைத்து ரூ.10 என நிர்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோல் விலை உயரும்போது, ஆட்டோ கட்டணத்தை குறைந்த அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோக்களுகான கேஸ் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பாக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment