Wednesday, June 6, 2012

5வது நாளாக டாக்டர்கள் ஸ்டிரைக் நீடிப்பு!

Wednesday, June, 06, 2012
சென்னை::தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அறிவித்த பிறகும் பயிற்சி டாக்டர்களின் ஸ்டிரைக் 5வது நாளாக நீடித்து வருகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனையில், கடந்த 2ம் தேதி பணியில் இருந்த டாக்டர் ராஜேஷ் என்பவர் மீது தாக்குதல் நடந்தது. இதனால், டாக்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

4வது நாளான நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள், வெளி நோயாளிகளுக்கு அரசு டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். இதனால் நோயாளிகள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்றனர். சிலர் வரிசையில் காத்திருக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர்.

இந்நிலையில், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜய், Ôடாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போராட்டம் குறித்து பயிற்சி டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீதர் கூறும்போது, ÔÔஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதையும் நிறைவேற்றினால்தான் போராட்டத்தை வாபஸ் வாங்குவோம்ÕÕ என்றார். தொடர்ந்து 5வது நாளாக பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக் தொடர்வதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்

அமைச்சருடன் இன்று பேச்சு

பயிற்சி டாக்டர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாரா, சென்னை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கனகசபை, அரசு மருத்துவமனை டாக்டர்களின் பிரதிநிதிகள் மற்றும் பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். பேச்சுவார்த்தையின்போது தங்கள் கோரிக்கைகளை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, இன்று பிற்பகலுடன் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment