Thursday, May 31, 2012

இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாக கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை: நவநீதம்பிள்ளை உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது-அரசாங்கம்!

Thursday,May,31,2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையோ அவரது குழுவினரோ இலங்கை வருவதான் அரசிற்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்டின் உள்ளக நிர்வாகங்களில் தலையிடுவதாகவோ அழுத்தங்களை பிரயோகிப்பதாகவோ அவர்களின் விஜயம் அமையக் கூடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாக கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை. வடக்கு கிழக்கில் முகாம்களை நிர்மாணிக்க அரசியல் தீர்வை ஏற்படத்தல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை ஆராய்வது போன்ற விடயங்கள் உள்நாட்டு விவகாரங்களாகும். இதில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நாட்டின் நீதிமன்ற பொறிமுறையினை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சரவையின் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறுகையில்,

உள்நாட்டில் 30 ஆவது ஆண்டு கால பயங்கரவாதத்தை ஒழித்து நிலையான சமாதானத்தையும் சுதந்திரத்தையும் இலங்கையில் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் முன்னேற்றங்களை காண்பதற்கான வழிமுறைகளை அரசு பல்வேறு துறைகளிலும் கையாண்டு வருகின்றது. சர்வதேசம் கூறுவது போன்று அவசரமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது.

குறிப்பாக தற்போது வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று பிரித்தானியா போன்ற நாடுகள் கூறி வருகின்றன. எந்தவொரு சர்வதேச நாட்டினதும் அழுத்தங்களையோ ஆலோசனைகளையோ அரசாங்கம் விரும்பவில்லை. எனவே பிரித்தானியா இலங்கையின் உள்ளார்ந்த விடயங்களில் தலையிடும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் 8 ஆயிரம் பேர் வரையிலானோரை புனர்வாழ்வு அளித்து அரசு விடுவித்துள்ளது. இது குறித்தும் சர்வதேச நாடுகள் தலையீடுகளை மேற்கொள்கின்றன. நீதிமன்ற பொறிமுறையின் அடிப்படையில் இடம்பெற வேண்டிய விடயங்களை பிறிதொரு நாடு வலியுறத்துகின்றமையானது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அந்நிய நாடுகள் கூறுவதைத்தான் செய்ய வேண்டுமென்றால் அரசியலமைப்போ சட்டங்களோ நாட்டிற்கு தேவையில்லை. எனவே அரசாங்கம் தேசிய கொள்கைகளில் நிலையான உறுதியுடனேயே இருக்கின்றது. ஜனநாயக நடவடிக்கைகளை உள்நாட்டில் முன்னெடுக்க பிரிதொருவரின் ஆலோசனை தேவையில்லை. நாட்டுக்குள் எந்தவொரு சர்வதேச நட்டவர்களும் வரலாம். அதற்கு எவ்விதமான தடைகளும் கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இந்திய எதிர்க்ட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையில் சர்வக் கட்சிகளின் பாராளுமன்றக் குழுவினர் இலங்கை வந்துச் சென்றனர். இக் குழுவினர் உள்நாட்டின் முன்னேற்றங்களை வெளிப்படையாகவே பாராட்டி விட்டுச் சென்றனர். இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையும் இலங்கைக்கு வந்து விட்டுச்செல்லலாம். ஆனால் நவநீதம்பிள்ளையின் இலங்கை மீதான பார்வை ஓரக்கண் பார்வையாகவே காணப்படுகின்றது. எனவே இவரின் வருகையும் நிலைப்பாடும் நாட்டிற்கு எதிராக காணப்படுமாயின் அதனை அரசு அனுமதிக்காது என்றார்.

No comments:

Post a Comment