Wednesday, May 2, 2012

எமது கொள்கையில் வழிமுறையில் நாம் ஒரு போதும் சிங்கள, முஸ்லிம் சகோதர மக்களை பகைத்துக்கொண்டவர்கள் அல்லர்: மே தின கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, May 02, 2012
இலங்கை::ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் அதன் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இங்கு அமைச்சர் உரையாற்றுகையில்,

எம் நேசத்திற்குரிய தொழிலாளர்களே, விவசாயிகளே! உழைக்கும் மக்களே!... உரிமைக்காக எழுந்து வந்திருக்கும் எம்மினிய தேச மக்களே! பிரியமுள்ள என் தோழர்களே!... உங்களுக்கு வணக்கம்!....

இன்றைய தினம், உழைக்கும் மக்கள் உரிமை பெற்ற தினம்! உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்படுகின்ற தேச மக்களே!.. ஒன்று படுங்கள் என்ற உரிமைக்கோசம் பிறந்த தினம்.

வெறும் சுய இலாபங்களுக்காக வெற்றுக்கோசங்களை எழுப்பாமல் சிந்திய வியர்வைக்கும், உழைப்புக்கும் உரிமை கேட்டு உழைக்கும் மக்கள் போராடி உரிமை பெற்ற தினம்!

இன்றைய உன்னத தினத்தில், தொழிலாளர்களும் விவசாயிகளும், உழைக்கும் மக்களும், உரிமை கேட்கும் எம் இனிய தேச மக்களும், ஒன்றுபட்டு வந்திருப்பது கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாம் அரசியலுரிமைகளுக்காக மட்டும் போராடப் புறப்பட்டவர்கள் அல்லர். உரிமை என்பது வெறுமனே அரசியல் பிரச்சினைகளோடு மட்டும் சம்பந்தப்பட்டதும் அல்ல.

எமது மக்கள் முகம் கொடுத்து வருகின்ற அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக என்று, அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக எம்மை நாமே அர்ப்பணம் செய்து கொண்டவர்கள்.

இவைகளுக்காக ஆரம்பகாலத்தில் ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே ஆரம்பித்து, அதில் நானும் ஒருவனாக பிரதான பாத்திரம் ஏற்று வழி நடத்திச் சென்றிருக்கின்றேன்.

அன்றைய ஆட்சியாளர்களிடம் இருந்து எமது மக்களையும் தேசத்தையும் மீட்டெடுப்பதற்காக நாம் ஒரு தேச விடுதலைப் போராட்டத்தையே நடத்தியிருந்தவர்கள்.

எமது போராட்டக் கொள்கையில், வழிமுறையில் நாம் ஒரு போதும் சிங்கள, முஸ்லிம் சகோதர மக்களை பகைத்துக்கொண்டவர்கள் அல்லர்.

மாறாக, சிங்கள சகோதர தொழிலாளர் வர்க்கத்தையும், அவர்களிடையே இருக்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், இஸ்லாமிய சகோதர மக்களையும் நாம் எமது நேச சக்திகளாகவே ஏற்றுக்கொண்டவர்கள்.

நாம் பிரிவினைவாதிகள் அல்லர். இனவாதிகளும் அல்லர். அன்றைய ஆரம்ப காலச்சூழலில் சிங்கள மக்களுக்கு தலைமை தாங்க முடிந்த சரியான முற்போக்கு சக்திகள் இருந்திருந்தால் நாம் ஒன்றுபட்ட முழு இலைக்கைத் தீவுக்குமான ஒரு புரட்சியையே முன்னெடுத்திருப்போம்.

அவ்வாறானதொரு சூழ்நிலை அற்ற நிலையில் நாம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் எமது போராட்டத்தை அன்று நடத்தியிருந்தோம்.

எமது போராட்டம் ஒரு தேச விடுதலைப் போராட்டமாக இருந்த போதும், எமது தேசத்தில் நிலவுகின்ற அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிராகவே நாம் போராடியிருக்கின்றோம். இன்றுவரை அதற்காகவே நாம் வாதாடியும் வருகின்றோம்.

உலகத் தொழிலாளர்களே!... ஒடுக்கப்படுகின்ற தேச மக்களே! ஒன்று படுங்கள்! என்ற உரிமைக் கோசத்தை ஏற்று எமது தமிழ் பேசும் மக்களுக்கான தேச விடுதலைப் போராட்டமும் அன்று வெற்றியின் திசை நோக்கி சென்றிருந்தது.

அப்போதுதான் ஒன்று பட்ட எமது போராட்டத்தில் பெரும் சூறாவளி வீசத்தொடங்கியது. ஏகப் பிரதிநிதித்துவம் என்ற தனித்தலைமை அதிகார வெறி தனது கொடுமையான குணாம்சத்தை காட்டத்தொடங்கியது.

ஒருதாய் பெற்ற பிள்ளைகள் நாங்கள் எதற்காக போராடப் புறப்பட்டோமோ அதை மறந்து எமக்குள் நாமே சகோதர யுத்தம் நடத்தியதால் எமது போராட்டம் திசை மாறிச் செல்ல ஆரம்பித்தது.

அத்தகைய தருணம் பார்த்து இலங்கை இந்திய ஒப்பந்தம் பிறந்தது. அது ஒரு பொன்னான வாய்ப்பு. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அதை எமது மக்களுக்காக சரியாக பயன்படுத்தியிருக்கவும் இல்லை.

அதை எதிர்த்தவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவான அரசியல் தீர்வுக்கு பதிலாக வேறெந்த தீர்வையும் எமது மக்களுக்கு இன்று வரை எடுத்துக் கொடுத்ததுமில்லை. மாறாக இருந்த நிலைமைகளையும், கிடைத்த உரிமைகளையும் தொலைத்தது ஒன்றுதான் மிச்சம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்றிருந்தால், அல்லது சரிவர நடைமுறைப் படுத்தியிருந்தால் தமிழ் பேசும் மக்கள் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமைகளை அனுபவித்திருப்பார்கள். இத்தனை பேரழிவுகள் எமது மக்களுக்கு நிகழ்ந்திருக்காது. பேரவலங்கள் இங்கு நடந்திருக்காது.

உரிமை என்பது வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கான வெற்றுக்கோசமல்ல. அது அடைந்தே தீர வேண்டிய எமது மக்களின் மாபெரும் சுதந்தரச்சொத்து! உணர்ச்சி பொங்க பேசுவதும், மக்களை வீதிக்கு அழைத்து விட்டு, தாம் மட்டும் தமது குடும்பங்களோடு நாட்டை விட்டே தப்பித்து ஓடுவதும், தமிழ் மக்களுக்கான உரிமைப்போராட்டமல்ல.

இதனால் எமது மக்களே அவலங்களை சந்தித்து நடுத்தெருவில் நின்றார்கள். அதுவே இங்கு நடந்து முடிந்திருக்கிறது. பண்டா செல்வா ஒப்பந்தமும், டட்லி செல்வா ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது. அன்றைய ஆட்சியாளர்களால்தான் என்பதை நாம் ஏற்கின்றோம்.

ஆனாலும் அதற்கு பின்னர் உருவான இலங்கை இந்திய ஒப்பந்தம் முதற்கொண்டு அடுத்தடுத்து எமக்கு கிடைத்திருந்த அரிய பல வாய்ப்புக்களை சரிவரப்பயன்படுத்த மறுத்தது சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளே என்பதை நாம் அனைவரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை, முன்னால் ஜனாதிபதி சந்திரிகா புலிகள் பேச்சு வார்த்தை, முன்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புலிகள் பேச்சு வார்த்தை, இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச அவர்களுடான பேச்சு வார்த்தை என அடுத்தடுத்து வந்த சந்தர்ப்பங்களை திட்டமிட்டே தவறவிட்டமை சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறு என்பதே உண்மை.

இது குறித்து சக தமிழ் அரசியல் தலைமைகளோடு நான் பகிரங்க விவாதம் நடத்தவும் தயாராக இருக்கின்றேன். இதை இன்றைய உழைக்கும் மக்களின் உரிமை தினத்தில் நான் பகிரங்கமாகவே மறுபடியும் கூறி வைக்க விரும்புகின்றேன்.

தனிநாடு கேட்டு விட்டு, தமிழ் மக்களை உசுப்பேற்றி விட்டு, தமிழ் நாட்டுக்கு ஓடிச்சென்று தனி வீடு பெற்று, சொகுசாக வாழ்ந்த இரா சம்பந்தன் அவர்களாக இருக்கட்டும், அல்லது மாவை சேனாதிராஐh அவர்களாக இருக்கட்டும் அவர்களை நான் பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றேன்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பை பெற்றிருந்தும் அதை துஸ்பிரயோகம் செய்து, தமிழ் மக்களையே கொன்றொழித்தவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களையும் நான் பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றேன்.

அழிவு யுத்தம் எமது மக்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தும் என்று அன்றே நாம் கூறினோம். அரசியல் பேச்சுவார்த்தையே எமக்கு தேவை என்றோம். இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைகளில் இருந்து ஆரம்பிப்பதே எமது இலக்கை அடையும் வழி என்று சொன்னோம்.

இவைகளை தமது சுயலாபங்களுக்காக அலர்ச்சியப்படுத்தினார்கள். ஆனாலும் இன்று சகல தமிழ் அரசியல் கட்சிகளும் நாம் சொன்ன படி இவைகளை நோக்கியே வந்திருக்கிறார்கள். எமது மக்கள் அழிந்து கொண்டிருந்த போது இந்த நடை முறைச்சாத்தியமான தீர்வு முயற்சிகளுக்கு யாரும் வரவில்லை.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் மீண்டும் அரசுடன் கதைப்பதற்குத் தயார் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அதனை நாம் வரவேற்கின்றோம்.

அரசாங்கம் தம்முடன் கதைக்கவில்லை எனக் குறைகூறித்; திரிவார்கள் சரி வாருங்கள் கதைப்போம் என்று அரசு கேட்டால் தங்களுக்கு அரசு மீது நம்பிக்கையில்லை என்பார்கள். ஏறவேண்டிய நேரத்தில் இறங்குவோம் என்பார்கள், இறங்கவேண்டிய நேரத்தில் ஏறுவோம் என்பார்கள், இதுதான் இவர்களது சுயலாப புத்தி.

இன்று அரசுடன் கதைக்க விருப்பம் என்கின்றார்கள். அரசியல் தீர்வினை விரைவில் எட்டுவதற்காக கடந்த ஐப்பசி மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு 06 மாத காலவாரையறை அரசினால் வழங்கப்பட்டிருந்தது. அந் நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதில் கலந்துகொண்டிருந்திருந்தால், நாம் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வினை ஜெனிவா மாநாட்டு காலகட்டத்தில் பெற்றிருக்கலாம்.

நாம் அரசுடன் வெளிப்படையாகவே கைகுலுக்குகின்றோம். ஆனால் தமிழத்; தேசியக் கூட்டமைப்பு மறைமுகமாக அரசுடன் கைகுலுக்குகின்றது. இதற்கு ஜெனிவா மாநாடும் நல்லதொரு உதாரணமாகும். நாம் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு எமது வெளிப்படைத்தன்மையை காட்டினோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தமது சுயலாப அரசியலுக்காக கலந்து கொள்ளாமல் அரசுக்கு மறைமுக ஆதரவு வழங்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுயரூபங்களை எமது மக்கள் இப்போது உணரத்தொடங்கி விட்டனர். அதனாலேயே அவர்களுக்கு இருந்த ஆதரவும் இப்போது சரியத்தொடங்கி விட்டது. அதனுடைய வெளிப்பாடே இன்றைய பெருந்திரளான உங்களது வரவு மேலும் உறுதிப்படுத்துகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றுக்கோசங்கள் எமது மக்களிடையே இனி ஒருபோதும் செல்லுபடியாகாது.

மக்கள் எமது பக்கம் இன்னமும் அதிகமாக அணிதிரளத் தொடங்கி விட்டனர். சாத்தான்கள் வேதம் ஓதுவது போல், சுயலாப அரசியல் கட்சிகள் இன்று தமிழ் பேசும் மக்களின் அவலங்கள் குறித்து பேசுகின்றன. உரிமை குறித்து பேசுகின்றன. இவை உண்மையுள்ளதாக இருந்தால், இவர்கள் அன்றே ஒரு நடைமுறைச்சாத்தியமான வழிமுறைக்கு வந்திருக்க வேண்டும்.

வன்னியில் யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக நான் தமிழ்த் தேசியக் கூட்டடைமைப்புடன் பேசியிருந்தேன். யுத்தத்தை நிறுத்தி, எமது மக்களின் அழிவுகளை தடுக்க அரசியல் தீர்வு முயற்சிக்கு வாருங்கள் என்று கேட்டிருந்தேன். ஆனாலும் அவர்கள் வரவில்லை.

மே தினம் என்பது உழைக்கும் மக்களின் உரிமைத்தினம். இதை உச்சரிப்பதற்கோ, அல்லது மேதின ஊர்வலம் நடத்துவதற்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர்கள்.

ஏனெனில், உழைக்கும் மக்களின் நலன்களுக்காக கூட்டமைப்பினரது செயற்பாடுகள் எதுவும் நடந்ததாக இது வரை இங்கு வரலாறு இல்லை. ஏன் இன்று எங்களது கடற்தொழிலாளர்களுடைய பிரச்சினைகள்……..

அரசியலுரிமை பிரச்சினை குறித்தும் அவர்கள் அது தீர்க்கப்பட வேண்டும் என்ற மன விருப்பங்களோடு செயற்பட்டிருக்கவில்ல. அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் …….

உழைக்கும் மக்களின் வாழ்வியல் உரிமைக்காக, எம்தேச மக்களின் அரசியலுரிமைக்காக, ஈ.பி.டி.பி யினராகிய நாமே இன்றுவரை நடை முறை சார்ந்து உழைத்து வருகின்றோம். போராடுவதற்கான நியாயங்களும், உரிமைகளும் உலகெங்கும் இன்னமும் இருந்து வருகின்றன.

அது போல், எமது தேசத்திலும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியலுரிமை பிரச்சினை உண்டு என்ற நியாயங்கள் இருக்கின்றன. ஆனாலும், உரிமைகளை அடைவதற்கான எமது போராட்ட வழிமுறைகள் மாறி வந்திருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கவில்லை.

உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்லின தேசிய மக்கள் ஒன்று பட்ட தேசத்திற்குள் உரிமை பெற்று வாழ்கின்றார்கள். அது போல் பல்லினங்கள் வாழும் இலங்கைத்தீவிலும் தமிழ் பேசும் மக்கள் உரிமையோடு வாழும் சூழலை நாம் இன்னும் உருவாக்க முடியும். நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் அரசுடன் இணக்கமாக பேசியே எமது அரசியலுரிமைகளை நாம் அடைய முடியும்.

நாம் முன்னெடுத்து வருகின்ற இணக்க அரசியல் வழிமுறை மூலம் எதை சாதித்தோம் என்பதற்கு மாறாக, வெறும் சுயலாபங்களோடு எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்கள் எதை சாதித்தார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். உணர்ச்சி பொங்க பேசுவதாலும், கிடைத்த சந்தர்ப்பங்களை சரிவரப்பயன்படுத்த மறுத்தமையினாலும் எமது மக்களுக்கு அழிவுகளையே அவர்கள் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.

ஆனாலும் நாம் அவர்களில் இருந்து மாறுபட்டவர்கள். நடந்து முடிந்த அழிவு யுத்த சூழலிலும் சரி, அதற்கு பிந்திய சூழலிலும் சரி நாம் காத்திரமான காரியங்களை ஆற்றியிருக்கின்றோம். எமது இணக்க அரசியல் வழிமுறை மூலம் பலவற்றை நாம் சாதித்திருக்கின்றோம். குறிப்பாக, எமது வழிமுறையில் அழிவுகள் இல்லை. ஆக்கங்களே உண்டு.

யாழ் குடாநாடு 1995 இல் படையினரால் மீட்கப்பட்டபோது விழிப்புடன் உழைத்தோம். காணாமல் போனோர் சங்கம் அமைத்து அமைதிப்போராட்டம் நடத்தினோம். உறுதியோடு போராடும் அதே வேளை அரசாங்கத்துடன் வெளிப்படையாக கைகுலுக்கி பேசியும் இருந்தோம். இதனால், எமது உறவுகள் காணாமல் போகும் அவலங்கள் தொடர்வதை தடுத்தோம்..

மனித கௌரவத்திற்கான மன்றம் அமைத்து கைது செய்யப்பட்டவர்களை காத்தோம். இலவச சட்ட உதவிகள் புரிந்து நம் உறவுகளை நாம் சிறை மீட்டோம். அன்று யாழ் குடாநாடு படையினரால் மீட்கப்பட்டபோது நாமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழி நின்று செயற்பட்டிருந்தால் இறுதியாக வன்னியில் உருவாகியிருந்த நிலைமைகளே எமது யாழ் குடாநாட்டு மக்களுக்கும் உருவாகியிருக்கும்.

இறுதி யுத்தம் நடந்த போது சரணடைந்தோர், கைது செய்யப்பட்டோரை மீட்க அரசுடன் நாங்கள் கைலுக்கி பேசினோம், பல்லாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க உழைத்தோம்.

இன்னும் இருக்கும் உறவுகளையும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கும் தடுப்பில் இருக்கும் உறவுகளை அதிலிருந்து மீட்பதற்கும் உழைப்போம்.

இழந்த உறவுகளுக்காக இருக்கின்ற உறவுகளை பலிகொடுக்கும் வன்முறைகளை தவிர்ப்போம். கைது செய்தல், காணாமல் போதல், உயிரச்சம் அற்ற ஜனநாயக சூழலை நாம் காப்போம். அழிவு யுத்த காலத்தில் உணவும் மருந்தும் கொடுத்தோம். மக்களை காத்தோம். மக்களை கைவிட்டு எங்கும் ஓடாமல், மக்கள் பணி செய்து மக்களுடன் வாழ்ந்தோம்.

அபிவிருத்தியும், அன்றாட அவலங்களுக்கு தீர்வும் கண்டு எம் மக்களை நேசித்தோம். நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வை வழியுறுத்தி சகலரையும் ஏற்க வைத்தோம். மக்கள் அவலப்படுகையில் ஓடி ஒளிந்து விட்டு, மழை ஓய்ந்ததும் புற்றீசல்கள் போல் புறப்பட்டுவருகிறார்கள். அழிவுக்கான சூழலை தூண்டி விட்ட இந்த சுயலாப கட்சிகள் குறித்து தொடர்ந்தும் விழிப்புடன் இருப்போம்.

எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டிய வரலாற்றுக்கடமை என்பது எமது கரங்களிலேயே சுமத்தப்பட்டிருக்கின்றது. எமது தேசத்தின் வளங்களை சுரண்டுவதற்காக இங்கு மறுபடியும் ஒரு வன்முறை சூழலை உருவாக்க முயற்சிக்கும் வெளித்தலையீடுகளை நாம் ஏற்க முடியாது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது வேறெந்த தரப்பினரோ எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண இதய சுத்தியோடு உழைப்பார்கள் என்றும் நம்பியிருக்க முடியாது.

இதை உணர்ந்து வரலாறு எம் மீது சுமத்தியிருக்கும் கடமைகளை ஏற்று நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம். எமது வழிமுறையே வெல்லும் என்பது இன்று வெளிப்படை உண்மையாகி விட்டது. சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் தமிழ் மக்களுக்கு மாவட்ட சபைகளே தீர்வாகும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆனாலும், மாவட்ட சபையில் இருந்து மாகாண அலகு நோக்கி நாம் எமது அரசாங்கத்தை அழைத்து வந்தமைக்கு காரணம் எமது இணக்க அரசியல் வழிமுறையே. சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற அமைச்சரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து தொடர்ந்தும் இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற பிரேரணையை கொண்டு வந்து அதை வெற்றி பெறச் செய்ததும் எமது இணக்க அரசியல் வழிமுறையே.

நாமும் எதிர்ப்பு அரசியல் நடத்திக்கொண்டிருந்தால், உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னமும் இங்கு நீடித்திருக்கும், இடம்பெயர்ந்த மக்களின் மீளகுடியமர்வுகள் இன்னமும் இங்கு நடந்திருக்காது. அபிவிருத்தி எமது மண்ணில் நடந்திருக்காது.

எம் இனிய மக்களே! எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் தேவை. சகல தொழிற்றுறைகளையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். இறுதி யுத்தத்தின் பொது சரணடைந்த, கைது செய்யப்பட்டவர்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமான இiளைஞர் யுவதிகள் அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் எஞ்சியுள்ளவர்களையும் விடுவிப்பதற்காக நாம் உழைப்போம். கடற்றொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்போம். பனந்தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வை உயர்த்துவோம். தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்வில் உயர்ச்சியை காண்போம்.

அழிந்த நம் தேசத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்துவோம். உழைக்கும் மக்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தேவை. அதற்காக அரசியல் அதிகாரங்களைப் பெறுவோம். வடக்கு மாகாணசபை எம் வசமாகும் என்பது இன்று உறுதியாகிவிட்டது. அரியலுரிமைக்காகவும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் வெறும் தத்துவங்களை மட்டும் நாம் பேசிக்கொண்டிருக்க முடியாது.

அதே வேளை இவைகளுக்காக நாம் உணர்ச்சி பொங்க பேசியும் பயனில்லை. இப்போது அனைவரும் சேர்ந்து உரத்து கோசமெழுப்புவோம். தொழிலாளர் உரிமைகள் வெல்க. உழைக்கும் மக்களின் வாழ்வு உயர்க அழிவில் இருந்து மீண்டெழ அபிவிருத்தி. அரசியலுரிமை பெற்று நிமிர அதிகாரப்பகிர்வு. உரிமைக்குக் குரல் கொடுப்போம் உறவுக்குக் கரம் கொடுப்போம்.

எமது இலட்சியப்பயணத்தில் என்னுடன் கூடவே நடந்து வந்தவர்களை என் சிறகுகள் வெட்டப்பட்டது போல் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்களின் நினைவாகவும், அர்த்தமற்ற அழிவு யுத்தத்தின் போது எமது மக்களை நாம் பலி கொடுக்க நேர்ந்தது… அவர்களின் நினைவாகவும்,.. இழந்த இழப்புகளுக்கு ஈடாக நாம் மாற்றமொன்றை இந்த மண்ணில் நிகழ்த்திக்காட்டுவோம். அந்த மாற்றம் என்பது ஐக்கிய இலங்கைக்குள் எமது மக்கள் சுதந்திரப் பிரஜைகளாக உரிமை பெற்று வாழ்வதேயாகும்.

No comments:

Post a Comment