Thursday, May 31, 2012

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் - கரு ஜயசூரிய!

Thursday,May,31,2012
இலங்கை::தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு முன்னர் பூரண அதிகாரம் கொண்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவையும், அரச சேவை ஆணைக்குழுவையும் ஸ்தாபிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

இதேவேளை தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் விடயங்களில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

அரசியலில் வெவ்வேறு கட்சிகள் என்ற ரீதியில் செயற்படுகின்ற போதிலும், தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் விடயங்களில் அவருடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு சில கடமைகள் உள்ளதாகக் குறிப்பிட்ட கரு ஜயசூரிய, அவர் தைரியம் உடையவர் எனவும் அவர் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே அனைவரினதும் தற்போதைய தேவையாக உள்ளதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment