Tuesday, May 1, 2012

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் துப்பாக்கிப் பிரயோகம் - குடும்பஸ்த்தர் படுகாயம்!

Tuesday, May, 01, 2012
இலங்கை::அம்பாறை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நேற்று இரவு 7.30 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவரின் தம்பியாகிய முஹமது லெவ்பை நஜீப் (வயது 39) என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார்.

காரில் சென்ற மேற்படி குடும்பஸ்தர் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் பாலத்தடிக்கு அண்மையில் காரை விட்டு இறங்கி நின்றபோதே ஆட்டோவில் வந்த சிலர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

நெஞ்சு உட்பட உடலின் பல இடங்களிலும் காயமடைந்த மேற்படி குடும்பஸ்தர் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆட்டோவில் வந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது அங்கு நின்ற சில இளைஞர்கள் ஆட்டோவைத் துரத்திச் சென்றுள்ளனர். ஆயினும் ஆட்டோ தப்பிச் சென்றுவிட்டது. துரத்திச் சென்ற மோட்டார்ச் சைக்கிளொன்று விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனைப் பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசம் உள்ளதும் சுடப்பட்டவர் மேற்படி பிரதேச சபைத் தலைவரின் தம்பி என்பதும்; இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment