Wednesday, February 1, 2012

இலங்கைத் தமிழ் இளைஞர்கள் காணாமல் போகும் மர்மம்:மத்திய அரசிடம் முறையிட தே.மு.தி.க., வலியுறுத்தல்!

Wednesday,February,01,2012
சென்னை::இலங்கைத் தமிழ் இளைஞர்கள் காணாமல் போகின்றனர் என்ற தகவல், இலங்கை அரசு அமைத்த குழுவின் மூலமே தெரிய வந்துள்ளது. இந்தப் பிரச்னையை, மத்திய அரசின் கவனத்திற்கு, தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்,'' என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:மத்திய வெளியுறவு அமைச்சர், சமீபத்தில் இலங்கை சென்று வந்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் பற்றி, அவர் பேசியிருக்கிறார். இந்நிலையில், இலங்கைத் தமிழ் இளைஞர்கள் அதிகளவில் காணாமல் போகின்றனர் என்றும், கடத்தப்படுகின்றனர் என்றும், சிறையில் அடைக்கப்படுகின்றனர் என்றும் தகவல் வந்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து அறிய, இலங்கை அரசு அமைத்த குழுவே, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் ஜெயக்குமார்: கவர்னர் உரையில் பேசுங்கள்.

ராமச்சந்திரன்: கவர்னர் உரை மீதான விவாதம் பொதுவானது. எதை வேண்டுமானாலும் பேசலாம். பதில் சொல்வது; சொல்லாமல் இருப்பதற்கு அரசுக்கு உரிமை உண்டு. போர் முடிந்தும் கூட, தமிழர்கள் உள்ள பகுதிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்கள், இன்னும் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்கள் இன்னமும், அடிமைகளாகத் தான் உள்ளனர்.
இந்த நிலையை, தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், இந்த விவகாரத்தை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment