Thursday, February 2, 2012

சட்டசபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க விஜயகாந்த்துக்குத் தடை வருமா?

Thursday, February 02, 2012
சென்னை::சட்டசபையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று விளக்கம் அளிக்குமாறு விஜயகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரும், அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் கூட்டத் தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்த பிரச்னையை உரிமை மீறல் குழு விசாரிக்கும் என்று சபாநாயகர் ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புதன்கிழமை பிற்பகல் உரிமை மீறல் குழுக் கூட்டம் நடந்தது. சபையில், தேமுதிகவினர் நடந்து கொண்ட விதம் குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனது நிலையைத் தெரிவிக்க உரிமை மீறல் குழுக் கூட்டத்துக்கு வியாழக்கிழமை வருமாறு விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் விஜயகாந்த் வருவாரா என்பது தெரியவில்லை. அவருக்குப் பதில் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்கலாம் என்று தெரிகிறது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் நடப்புக் கூட்டத் தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், விஜயகாந்த் உள்ளிட்டோரின் செயல் கூட்டத் தொடர் முழுமைக்கும் அவர்களை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு கடுமையானது என்று சாடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment