Thursday, February 2, 2012

கவர்னர் தொடங்கி வைத்தார் சென்னை மீனாட்சி கல்லூரியில் சூரியசக்தி ஆற்றல் மாநாடு!

Thursday, February 02, 2012
சென்னை::சூரியசக்தியின் பன்முக ஆற்றல் தொடர்பான 3 நாள் சர்வதேச மாநாட்டை கவர்னர் ரோசய்யா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வல்லுநர்கள் பேசவுள்ளனர். சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் சூரியசக்தியில் உள்ள பயன்கள், வாய்ப்புகள், புதுமைகள், வருங்கால திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. ஈரான், கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, நைஜீரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வல்லுநர்கள் சூரியசக்தி குறித்து விரிவாக பேச உள்ளனர்.

கல்லூரி வளாகத்திலேயே ரூ.2 லட்சத்தில் மாணவிகள் உருவாக்கிய சூரியசக்தி மின்திட்டத்தை தமிழக கவர்னர் ரோசய்யா பார்வையிட்டார். பின்னர் மாநாட்டை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: வளர்ந்து வரும் ஆற்றல் துறையில் புவிவெப்பம், பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு என பல்வேறு சவால்கள் உள்ளன. இதற்கு மாற்றாக எந்த வித மாசும் இன்றி சூரியசக்தி மூலம் ஆற்றலை பெற முடியும். அறிவியல் முன்னேற்றம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதனால் புவி வெப்பம், இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. எனவே மாற்று வழியில் ஆற்றலை அதிகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் Ôஜவஹர்லால் நேரு தேசிய சோலார் மிஷன்Õ என்ற திட்டத்தை 2010 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் வருடம் முழுவதும் சூரியஒளி ஆற்றலை பெற முடியும். இதற்காக மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. இவ்வாறு கவர்னர் பேசினார்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் சுதீப்சிங் ஜெயின் பேசுகையில், சூரியசக்தியின் பயன்கள், தேவை, புதுமைகளை கல்லூரி மாணவர்களிடம் கற்பிப்பதும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான பணியாகும். சூரியசக்திமூலம் மின்உற்பத்தி பெறுவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் மொத்த சூரியசக்தி மின்உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 36 சதவீதம். 42 சதவீதம் காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர 2015ம் ஆண்டுக்குள் தமிழ் நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் 3000 மெகா வாட் மின்உற்பத்தி செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சூரியசக்தியுடன் கூடிய 62 ஆயிரம் பசுமை வீடுகளை கட்டவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகளாக அதிகரிக்கும் என்றார்.

இந்த மாநாட்டில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், கல்லூரியின் செயலாளர் லட்சுமி, (ஆராய்ச்சி) டீன் ரகுநாதன், முதல்வர் பாபாய் உட்பட 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment