Saturday, December 31, 2011

அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் : முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை!:-நிவாரண பணிக்கு ரூ.150 கோடி:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு!

Saturday,December,31,2011
சென்னை::அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவில் பேசிய அவர், தமிழ்நாட்டை தாண்டி, தேசிய அரசியலிலும் சாதனை படைப்பதற்கான காலம் அதிமுகவிற்கு நெருங்கிவிட்டதாகவும் கூறினார்.

மேலும், கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் அதிமுகவினருக்கு மன்னிப்புக் கிடையாது என்றும் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்திற்காக கையேந்தி போராட வேண்டிய நிலை ஒருபோதும் வராது என்றும் அவர் கூறியுள்ளார். மிகுந்த கவனத்துடன் தாம் ஆட்சியை நடத்தி வருவதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிவாரண பணிக்கு ரூ.150 கோடி:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு!

சென்னை::புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.150 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புயல் மற்றும் மழை சேதங்கள், மேற்கொள்ள வேண்டிய நிவாரண ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் புயலால் சாய்ந்த மரங்கள், மின் கம்பங்களை சரி செய்யவும், போக்குவரத்தை சரி செய்யவும் உத்தரவிட்ட முதல்வர், உடனடி நிவாரணப்பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ. 150 கோடியை உடனடி நிதியாக விடுவித்து உத்தரவிட்டார்.

அதே போல புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும் நிவாரணப்பணிகளை பார்வையிட திருவள்ளூர் மாவட்டத்துக்கு அமைச்சர் ரமணா, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சின்னையா, விழுப்புரம் மாவட்டத்துக்கு சி.வி.சண்முகம், நாகை மாவட்டத்திற்கு ஜெயபால், கடலூர் மாவட்டத்திற்கு சம்பத் ஆகியோரை அனுப்பியும் முதல்வர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment