
சென்னையில் பல்வேறு தனியார், அரசு வங்கிகள் ஏடிஎம் மையங்களை அமைத்துள்ளன. இந்த மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்ட்களை திருடி போலி அட்டைகளைத் தயாரித்து பண மோசடி செய்வது தொடர்பாக தமிழக போலீஸ் இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். நவீன முறையில் நடந்து வரும் இந்த சைபர் குற்றச் செயலால் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருட்டால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் அவற்றைப் பறி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்டர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் குழுவினர் உலக நாடுகள் பலவற்றிலும் குறிப்பாக ஐய்ரோப்பிய நாடுகளில் உள்ள வங்கிகளிலும், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இம்மாதிரியான மோசடிகளைச் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கும்பலிடம் பணம் பறிகொடுத்த வகையில் சுமார் 150 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகார்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதால் ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பெருமளவில் நகரில் நடமாடுவதாக காவற்துறையினர் அஞ்சுகிறார்கள்.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தக் கும்பலின் தலைவனாக செயல்படுபவர் ஒரு இலங்கைத் தமிழர் என்று நம்பப்படுகிறது. இவர் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இக்குழுவை இயக்குவதாக செய்திகள் கசிந்துள்ள நிலையில் இவரைப் பிடிக்க இண்டர்போலின் உதவியை நாடியுள்ளனர் தமிழக காவற்துறையினர்.
No comments:
Post a Comment