Wednesday, August 31, 2011

அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 பேர் விரைவில் விடுதலை!

Wednesday,August,31,2011
அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 பேரை விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவ ர்கள் தொடர்பான வழக்குக் கோவை களை சட்ட மா அதிபர் திணைக்களம் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவசரகால சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கமைய தடுத்து வைக்கப்பட்டவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என்ற கருத்தையும் தெரிவித்தார்.

அதேவேளை; பாரதூரமான குற்றங்களுக்குள்ளானவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அவசரகால சட்ட பின்னேற்பாடுகள் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய நலன் கருதிய அவசர சட்டமூலமாக இச்சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு அறிமுகப்படுத்தப்பட வுள்ளதாகவும் அதற்கு முன்னதாக அதனை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவசரகால சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளதையடுத்து, அதன் ஒழுங்கு விதிகளுக்கமைய தடுத்து வைக்கப்பட்டு ள்ளவர்களை விடுதலை செய்வதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

அவசரகால சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளதையடுத்து, அதன் ஒழுங்கு விதிகளுக்கமைய பல்வேறு காலகட்டங்களி லும் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்தும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட் டுள்ளன. சாதாரண குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களில் கணிசமானோரின் வழக்குக் கோவைகள் தற்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களில் 1200 பேரை விரைவில் விடுவிக்க முடியும்.

அதேவேளை; பாரதூரமான குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு எதிரான சாட்சியங் கள் தற்போது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இவர்களின் விசாரணை தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே அவசரமான சட்டமூலமொன் றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு பாரதூரமான குற்றங்களுக்கு உட்பட்டவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment