Friday, July 22, 2011

மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமானவரி சோதனை!.

Friday, July 22, 2011
திருவனந்தபுரம் :சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரில் பிரபல நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் ரெய்டு, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பளதாரர்கள் மற்றும் வியாபாரிகள் (தணிக்கைக்கு உட்படாத கணக்கு) ஆகியோர் 2010-11ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்களை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமானவரித்துறை கெடு விதித்துள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பிரபல தொழில் அதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் தங்களது வருமானத்துக்கு முறையாக வரி செலுத்துகிறார்களா என்பதை வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பது வழக்கம்.

வருமானவரி கணக்கு காட்டியவர்கள், வரி ஏய்ப்பு செய்வதாக சந்தேகம் எழுந்தால் அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்துவர். இந்நிலையில், கேரள சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். இவர்கள் இருவருக்கும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், சென்னையில் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளன. இந்த இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து இன்று காலை முதல் இந்த இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் சுமார் 100 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை பிஷப் கார்டன் தோட்டத்தில் உள்ள நடிகர் மம்மூட்டி வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் பற்றி இன்று மாலை தகவல் வெளியாகும் என தெரிகிறது. முன்னணி நடிகர்கள் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தப்படுவது, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment