Friday, July 22, 2011

இலங்கைக்கு நெருக்கடி நேரும் போதெல்லாம் இந்தியா சாதகமாக உறுதுணை புரியும்!

Friday, July 22, 2011
பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், சிரேஷ்ட ஆசிரியர்களையும் உத்தியோகபூர்வமாக ஒருவாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து தங்களை சந்தித்து செல்லுமாறு அழைப்புவிடுத்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் திருமதி நிருபமா ராவ் அவர்களை நாம் எமது இந்திய விஜயத்தில் முதல் நிகழ்வாக சவுத் புளொக் என்று அழைக்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சில் சந்தித்தோம்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் திருமதி நிருபமா ராவுடன் கட்டுரை ஆசிரியரும், லக்பிம ஆங்கில வார ஏட்டின் பிரதான ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்கவும் தனிப்பட்ட முறையில் உரையாடுகிறார்கள்.

கட்டுரையாசிரியரையும் வேறுசில ஆசிரியர்களையும் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்திருந்த நிருபமா ராவ், தமது உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் நட்புறவுடன் குசலம் விசாரித்தார். நாமும் கூடிய விரைவில் அவர் இந்தியாவின் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து எமது பாராட்டையும் நல்வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டோம்.

இந்திய இராஜதந்திரிகள் மிகவும் அன்பாகவும் நட்புறவுடனும் மென்மையாகவும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் தாங்கள் சொல்லவேண்டிய கருத்தை சரியானமுறையில் தீர்க்கமாகத் தெரிவிப்பார்கள். அதற்கு நிருபமா ராவ் விதிவிலக்காக இருக்கவில்லை.

இந்தியா இலங்கையின் அயல்நாடு. இலங்கை வளர்ச்சியடைந்து பொருளாதாரத்துறையில் முன்னணியில் இருப்பதை நாம் பெரிதும் விரும்புகிறோம் என்ற பீடிகையுடன் தமது அறிமுக உரையை ஆரம்பித்த திருமதி ராவ், இன்று இலங்கையில் யுத்த கருமேகங்கள் நீங்கி அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருக்கின்ற போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனத்துயரை தீர்ப்பதற்கு இதுவரையில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சிறந்தமுறையில் எடுத்திருக்கிறது என்று எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற ஒரு கருத்தை வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு இணைப்புக் குறித்து இந்தியா தலையிடாது. அதனை 1987ம் ஆண்டில் ஏற்படுத்துவதற்கு உந்துசக்தியாக இந்தியா இருந்தாலும் இன்று இதுகுறித்து தீர்மானிக்கும் முழு பொறுப்பை இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த திருமதி ராவ், இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது. நிரந்தர சமாதானத்துக்கு சகல உதவிகளையும் இந்தியா வழங்கும். 13ஆவது திருத்தத்துக்கு மேலதிகமான அதிகாரங்களுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்பது நல்லது என்று கூறினார்.

தருஸ்மன் அறிக்கையை பற்றியோ, சனல்-4 வீடியோ அறிக்கைகளைப் பற்றியோ இந்திய அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. நாம் எந்நேரமும் இலங்கையின் நட்புநாடாகவிருந்து இத்தகைய நெருக்கடி நிலை ஏற்படும்போது இலங்கைக்கு சாதகமாக உறுதுணைபுரிவோம் என்று கூறினார். தருஸ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள், பற்றிய குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் தனது நிலையை விளக்கிக்கூறுவது மிகவும் அவசியமாகும்.
இந்திய வெளியுறவு அமைச்சுக்
கட்டடத்தின் வெளித்தோற்றம்.

அவ்விதம் செய்தால் இந்தியா இலங்கைக்கு பக்கபலமாக இருந்து சர்வதேச அழுத்தங்களை இல்லாமல் செய்யமுடியும் என்று திருமதி ராவ் தெரிவித்தார்.

ஒரு விடயத்தை நான் திட்டவட்டமாக கூறவிரும்புகிறேன் என்ற திருமதி நிருபமா ராவ், இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவவேண்டுமாயின் தமிழ் மக்களின் குறைபாடுகளை நிரந்தரமாக தீர்த்துவைக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை இலங்கை காலதாமதமின்றி ஏற்படுத்தவேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொண்டுவருமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று லக்பிம ஆங்கில வார இதழின் ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க கேட்டகேள்விக்கு பதிலளித்த திருமதி ராவ், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. தமிழ்நாடு இந்தியாவின் ஓர் அங்கம். எனவே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவிக்கும் கருத்துக்களை புறக்கணிக்க முடியாது.

அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும் மத்திய அரசாங்கமே இந்தியாவின் வெளிவிவகார கொள்கை குறித்து தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறது என்று சொன்னார்.

எவ்வாறாயினும் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கும் தமிழ் நாட்டிலிருந்துவரும் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும், இந்தியப் பிரதம மந்திரியின் இந்த திரிசங்கு நிலையை இலங்கை புரிந்துகொள்ளவேண்டுமென்றும் திருமதி ராவ் தெரிவித்தார்.

அப்போது, குறுக்கீடுசெய்த கட்டுரை ஆசிரியர் இலங்கை ஜனாதிபதிக்கும் இத்தகைய உள்ளூர் பிரச்சினைகள் இருப்பதை இந்தியாவும் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை முழுவதும் மக்களின் பேராதரவு இருக்கின்ற போதிலும் அவரது ஆகக்கூடிய பலம் தென்னிலங்கையில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டி, தென்னிலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மட்டுமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் நிரந்தர தீர்வொன்றை காணமுடியும் என்பதையும் இந்தியா புரிந்துகொண்டு அவர்மீது அரசியல் தீர்வை அவசரமாக நிறைவேற்றவேண்டுமென்று கொண்டுவரும் அழுத்தங்களை தவிர்க்கவேண்டுமென்றும் கூறினார். அதற்கு திருமதி ராவ் சிரித்துக்கொண்டு பதில் அளிப்பதை தவிர்த்துக்கொண்டார்.

இலங்கையில் சீனா அதிகம் ஈடுபாடுகொண்டிருப்பது குறித்து இந்திய அரசாங்கம் சற்று மனத்தாங்கல் அடைந்திருக்கின்றது என்ற கருத்தில் உண்மையிருக்கிறதா என்று இன்னுமொரு ஆசிரியர் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் கேட்டதற்கு, அவர் அதற்கு முற்றாக இல்லையென்று மறுப்புத் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தியில் சீனா அதிக ஈடுபாடுகொண்டிருப்பது குறித்து இந்தியா என்றுமே அது தனக்கு சீனாவிடமிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தலென்று நினைக்கவில்லை.

சீனாவும் இந்தியாவும் பலகோடி டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தை செய்துவருகின்றன. அதனால் எங்களிரு நாடுகளுக்கிடையில் நட்புறவு உச்சநிலையில் இருக்கின்றபோதிலும் எல்லைத்தகராறு போன்ற சிறு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறினார்.

இலங்கையில் நிரந்தர சமாதானமும் அமைதியும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம். இது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இலங்கையில் பொருளாதார வளர்ச்சி உச்சகட்டத்தில் அமைந்தால் அது இந்தியாவுக்கே உதவியாகவிருக்கும். எனவே, நாம் இலங்கையின் நட்பு நாடு என்ற முறையில் இலங்கையின் முன்னேற்றத்தில் அதிக அக்கறைகொண்டிருக்கிறோம் என்று திருமதி ராவ் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் முதன் முதலில் இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு கூடிய விரைவில் எல்லா மக்களின் பூரண அங்கீகாரத்துடன் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று கூறி பத்திரிகை ஆசிரியர்களுடனான தனது கலந்துரையாடலை முடிவுக்குக் கொண்டுவரவிருந்த சந்தர்ப்பத்தில் சண்டேடைம்ஸ் பத்திரிகையின் சிரேஷ்ட பத்திரிகையாளர் கிறிஸ் கமலேந்திரன், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து எங்கள் நாட்டின் மீன்வளத்தை அபகரித்து செல்வதுடன் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் எமது மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்களே? இது நியாயம்தானா என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு திருமதி ராவ் யதார்த்தபூர்வமான பதிலொன்றை அளித்தார். கடற்றொழிலாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக விருந்தாலும் அவர்கள் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அவர்கள் கடலுக்குச்சென்று மீனைபிடித்து கரைதிரும்பினால் தான் அவர்களது குடும்பத்தை வாழவைக்கமுடியும். அதனால் தான் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அயல்நாட்டு கடல் எல்லைக்குள்ளும் பிரவேசித்து மீனை பிடிக்கிறார்கள். இதனை நான் சரியென்று வாதிட விரும்பவில்லை.

என்ற பீடிகையோடு தனது பதிலை ஆரம்பித்த திருமதி நிருபமா ராவ், இலங்கை தரப்பிலும், இந்திய தரப்பிலும் மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வது தவறு. அவர்கள் பிழை செய்திருந்தால் அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். அதற்குப் பின்னர் இராஜதந்திர மட்டத்தில் இருதரப்பு மீனவர்களும் பரஸ்பரம் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

இதற்கென இந்தியாவும் இலங்கையும் இணை செயற்குழுவொன்றை கடந்த மார்ச் மாதத்தில் உருவாக்கி மீனவர் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வை எடுப்பதற்கு இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மீனவர் பிரச்சினையை இலங்கையோ, இந்தியாவோ அரசியல் மயப்படுத்துவது தவறு என்றும் திருமதி ராவ் கூறினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு அமைந்திருக்கும் சவுத் புளொக் என்று அழைக்கப்படும் கட்டடம் பண்டைய மன்னர் கால கட்டடங்களைப் போன்று பாரிய கருங்கற்களினால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அங்கு மேற்குலகின் ஆடம்பரங்களை நாம் காணவில்லை. மின்உயர்த்திகள் கூட அக்கட்டடத்தில் பொருத்தப்படவில்லை.

நன்கு அகலமான படிக்கட்டுக்களே அங்கு இருந்தன. அக்கட்டடத்தைப் பார்க்கும்போது நாம் ஏதோ ஒரு இராணுவ முகாமுக்கு வந்துவிட்டோமோ என்ற உணர்வுதான் ஏற்படும். அந்தளவுக்கு அதற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. முன்வாயிலில் நுழைபவர்களின் உடைமைகள் மற்றும் உடல் எக்ஸ்ரே இயந்திரத்திற்குட்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றவுடன் அங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மிகவும் கண்ணியமான முறையில் உடல்சோதனையை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் செய்கிறார்கள்.

அங்கிருந்து விடைபெற்று நாம் தங்கியிருந்த புதுடில்லி ஒபரோய் ஹோட்டலுக்கு வந்தவுடன் அங்கும் பழையபடி எக்ஸ்ரே சோதனைகளும், உடல் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த அனுபவங்களைப் பெற்ற எங்கள் குழுவிலிருந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் யுத்த நிலைமை இலங்கையில் உச்சகட்டத்தில் இருந்தபோதும் கூட எங்கள் நாட்டில் இந்தளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்த ப்பட்டிருக்கவில்லையென்ற உண்மையான கருத்தை வெளியிட்டார்.

இந்தியா இவ்விதம் தனது பாதுகாப்பில் அதிக அக்கறைகொண்டிருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அங்கு பிரிவினைவாதம் அதிகளவில் இல்லாவிட்டாலும், நக்ஸலைட் தீவிரவாதிகள், முஜாஹிதீன் தீவிரவாதிகள் போன்ற பலதரப்பட்ட ஆயுதம் ஏந்திய குழுக்களின் அச்சுறுத்தல் இருக்கின்ற காரணத்தினால்தான் இந்திய அரசாங்கம் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்திருப்பதை எங்களால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

(அடுத்த வெள்ளிக்கிழமை இந்தக் கட்டுரை தொடரும்)

No comments:

Post a Comment