Pages

Wednesday, December 24, 2014

வெள்ள அனர்த்த மீட்புப் பணிகளில் இராணுவம்!

Wednesday, December 24, 2014
இலங்கை::வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 8000 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வன்னி படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள வன்னிப் படைத் தலைமையகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் அனர்த்தங்கள் செயற்கையாகவும் இயற்கையாகவும் ஏற்படுகின்றன. இயற்கையாக ஏற்படும் அனர்த்தத்தை குறைக்க முடியுமே தவிர, முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. தற்போது அனுராதபுரம், மன்னார் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன. இப் பிரதேசங்களை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து நேற்றைய தினம் உலங்கு வானூர்த்தி மூலம் பார்வையிட்டேன். தண்ணீரை வெளியேற்றி அனர்த்தத்தை குறைக்க முடியுமா என பரிசீலித்தோம். ஆனால் உடனடியாக அப்படி எதுவும் செய்ய முடியாதுள்ளது.
 
மல்வத்து ஓயா பெருக்கெடுத்தமையால் சிக்குண்ட 700 பேரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ பிரிவும் பணியாற்றுகிறது. வெள்ள நீரின் காரணமாக மன்னார் – மடு வீதி, செட்டிகுளம் – பூவரசன்குளம் வீதி, நெளுக்கும் – செட்டிகுளம் வீதி பாதிப்படைந்துள்ளது. இப் பகுதியில் பயணிப்பவர்கள் அவதானது;துடன் செல்லவேண்டும். மடு பகுதியில் தம்பனைக்குளம் கிராமம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. அங்கு நிவாரணப் பணியில் இராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
அனுராதபுரத்தில் மழை, வெள்ளம் காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர். 64 நலன்புரி முகாம்கள் உருவாக்கப்பட்டு 2457 குடும்பங்களைச் சேர்ந்த 7974 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 8044 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவ்வாறாக மன்னார் மற்றும் அனுராதபுரத்தில் 8000 இராணுவத்தினர் மீட்புப் பணியில் உள்ளனர். வவுனியாவில் எம்மிடம் உதவி கோரப்படவில்லை. அனர்த்தம் ஏற்படும் போது உதவி தேவைப்பட்டால் உடனடியாக ,அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு தெரியப்படுத்தவும். எவ்வேளையிலும் இராணுவம் நிவாரணப் பணிக்கு தயாராகவே உள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment