Pages

Thursday, December 11, 2014

தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் விடுதலை!

Thursday, December 11, 2014
ராமேசுவரம்::நேற்று காலை ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு இலங்கைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் சீறிப்பாய்ந்து வந்தன. இதனை பார்த்ததும் மீனவர்கள் தங்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் இலங்கை கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களின் 6 படகுகளை சுற்றி வளைத்தனர்.
 
இதில் ராமேசுவரத்தை சேர்ந்த எடிசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த படகுகளில் இருந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு படகுகளையும் கைப்பற்றினர்.
 
தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த பகுதியில் இனிமேலும் மீன் பிடிக்க வந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். அதன்பிறகு தமிழக மீனவர்கள் 27 பேரையும் இலங்கை கடற்படையினர் விடுவித்தனர். இதையடுத்து மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பினர். இதையடுத்து மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த 9–ந்தேதி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும் அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பினார்.
 
ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 66 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment