Pages

Monday, October 13, 2014

ஆந்திராவை புரட்டி போட்டது புயல் ரூ. 10 ஆயிரம் கோடி சேதம்: 8 பேர் பலியான பரிதாபம்!

Monday,October, 13, 2014
ஐதராபாத்::ஆந்திராவை புரட்டிப் போட்ட ஹூட் ஹூட் புயலுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். ரூ.10 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது.அந்தமான் மற்றும் மியான்மர் ஆகியவற்றின் அருகில் வங்க கடலில் சமீபத்தில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. இதற்கு ஹூட் ஹூட் என ஓமன் நாடு பெயர் சூட்டியது. இந்த புயல் இந்தியாவில் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதை தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டன. கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் வசித்த சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இந்த புயல் நேற்று காலை ஆந்திராவை நெருங்கியது. நேற்று பிற்பகலில் அது விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. அப்போது, மணிக்கு, 200 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. எதிரில் வருபவர்கள் தெரியாத அளவுக்கு, மழை கொட்டத் தொடங்கியது. கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கரையை  தாக்கின. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன.  ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மின் கம்பங்களும், சிக்னல் கம்பங்களும் முறிந்து விழுந்தன. தொலை தொடர்பு கோபுரங்கள் உருக்குலைந்து, பல பாகங்களாக தொங்கிக் கொண்டிருந்தன. தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது. புயலின் தாக்கத்தால், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. வீட்டுச்சுவர் இடிந்ததில், ஸ்ரீகாகுளத்தில் இரண்டு பேரும், மரம் முறிந்து விழுந்ததில், விசாகப்பட்டினத்தில் ஒருவரும் உயிர் இழந்தனர்.புயலின் பாதிப்பு ஒடிசாவையும் விட்டு வைக்கவில்லை. ஒடிசாவில் உள்ள கஞ்சாம், கஜபதி, மல்காங்கிரி, கோராபுட், ராய்கடா, நபராங்பூர், கலந்தி ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசியது. புரி மாவட்டத்தில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், அலையில் சிக்கி உயிர்இழந்தார். பலத்த மழைக்கு, கேந்திரபாரா மாவட்டத்திலும் ஒரு சிறுமி உயிரிழந்தார்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற ஒருவர் உயிரிழந்தார். ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  பல லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.புயல் கரையை கடந்து வலுவிழந்து விட்ட போதிலும் அடுத்த 3 நாட்களுக்கு ஆந்திரா, ஒடிசாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

 புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக, 55 காலி ரயில் பெட்டிகளை, முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 44 படைகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.புயல் காரணமாக ஏற்பட்டுள்ள சேத மதிப்பு குறித்து மாநில அரசு இன்னும் ஆய்வு பணிகளை தொடங்கவில்லை. அனேகமாக சேத மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் நிலவரம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் கட்டமாக ரூ.2000 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலுக்கு பாதிக்கப்பட்டுள்ள பயிர்களின் சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் விரைவில் ஆய்வு மேற்கொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், மீட்பு பணிகளை விரைவுபடுத்துவதற்காக சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களை அளிக்கும்படி இஸ்ரோவிடம் கேட்டுள்ளோம். மீட்பு பணிக்கு தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ள விசாகபட்டினம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தந்து உதவும்படி தமிழகம் மற்றும் ஒடிசாவை கேட்டுள்ளோம். போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment