Pages

Monday, October 13, 2014

இஸ்ரேல் குண்டு வீச்சில் உருக்குலைந்த பாலஸ்தீனத்தை சீரமைக்க சர்வதேச நாடுகள் நன்கொடை!

 Monday,October, 13, 2014
கெய்ரோ::இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் அதிகாரத்தில் இருக்கும் காஸாவுக்கும் இடையே கடந்த ஜூலை முதல் ஆகஸ்டு மாதம் வரை சண்டை நடந்தது. காஸா மீது 50 நாட்களாக இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது.
 
அதில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள நகரங்கள் உருக்குலைந்து நாசமாயின. ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.
 
எகிப்து முயற்சியால், தற்போது ஏற்பட்ட பேச்சு வார்த்தையின் மூலம் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்க அமெரிக்கா, எகிப்து மற்றும் ஐ.நா. சபை தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
 
இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலால் சின்னா பின்னமாகி கிடக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை சீரமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் எகிப்து தலைநகர் கொய்ரோவில் நடந்தது. அதில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் – கி – மூன், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
பாலஸ்தீனத்தின் காஸாவை சீரமைக்க உலக நாடுகள் ரூ. 35 ஆயிரம் கோடி நன்கொடை வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. இது குறித்த ஒருமித்த தீர்மானத்தை நார்வே வெளியுறவு மந்திரி போயர்ஸ் பிரண்டே வாசித்தார்.
 
சீரமைக்க பாலஸ்தீனம் ரூ. 25 ஆயிரம் கோடி உதவியை கோரியது. ஆனால் அமெரிக்கா ரூ. 1275 கோடியும், ஐரோப்பிய யூனியன் ரூ. 3700 கோடியும், ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் குவைத் ரூ. 1250 கோடியும் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளன.
 
மொத்தத்தில் ரூ. 35 ஆயிரம் கோடி நன்கொடை வழங்குவதாக சர்வதேச நாடுகள் முடிவு செய்துள்ளன.

No comments:

Post a Comment