Wednesday, April 09, 2014
இலங்கை::அதிகாரப் பகிர்வு தொடர்பிலான கலந்துரையாடலும், தற்போது அதிகாரத்தை செயற்படுத்தும் அனுபவமும் இணைந்தால் தேசிய ஒருமைப்பாட்டு விடயத்தில் தீர்வொன்றினை எட்டமுடியுமென தாம் நம்புவதாகத் தெரிவிக்கும், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இது தொடர்பில் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு வழிகாட்ட வேண்டிய தேவையில்லையெனவும், இதற்கு அயல்நாடுகள் தமது ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் நேற்று திங்கட்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட தேசிய ஐக்கியத்திற்கான மாநாட்டில் கலந்துகொண்டு வரவேற்புரையை நிகழ்த்தியபோதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறுகையில்,
தேசிய ஒருமைப்பாடு பின்பற்ற வேண்டியதொன்றா? தேசிய ஒருங்கமைப்பினை செயற்படுத்தாததற்கான காரணமென்ன? இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான காரணிகள் எவை? அதனை எவ்வாறு எதிர்கொள்வதென்பது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் விவாதமொன்றினை ஏற்படுத்தவே இம்மாநாட்டினை நாம் நடத்துகின்றோம்.
தேசிய ஒருமைப்பாடு தொடர்பில் ஆட்சி நிர்வாகம் அவசியமான அரசியல் வியூகத்தை அமைக்க முடியாமல் போனதால் இலங்கையில் இன ஐக்கியத்தை பூரணமாக உருவாக்க முடியாமல் உள்ளது. அனைத்து மக்களும் வாழக்கூடிய தேசத்தை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் முன்னுள்ள பாரிய சவாலாகும்.
அத்துடன் ஆட்சி முறை தொடர்பான எதிர்பார்ப்புகளைக் கட்டியெழுப்பி மாகாண சபை அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி தொடர்பிலான சங்கற்பம், அது தொடர்பான ஆட்சி முறையின் போக்கு தொடர்பில் இன்று விவாதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்ப் பிரதிநிதிகளும் சுயாட்சிகோரும் இடத்திற்கு வந்துள்ளனர். இது இலங்கையின் வரலாற்றில் ஜனநாயகப் போக்கினை உறுதி செய்யும் எல்லையாகப் பார்க்கப்படுகிறது.
அதிகாரப் பகிர்வு தொடர்பிலான கலந்துரையாடலும், தற்போது அதிகாரத்தை செயற்படுத்தும் அனுபவமும் இணைவதால், தேசிய ஒருமைப்பாடு தொடர்பிலான தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முடியுமென நாம் நம்புகிறோம். இது தொடர்பில் மேற்குல நாடுகள் எமக்கு வழிகாட்டத் தேவையில்லை. அயல்நாடுகள் எமக்கு இவ்விடயம் தொடர்பில் ஒத்துழைப்புக்களை வழங்க முடியும்.
அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், மத சுதந்திரத்தை உறுதி செய்தல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணிப்பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்தல் ஆகிய செயற்பாடுகளை முழுமையாக செயற்படுத்தினால் மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என்றார்.

No comments:
Post a Comment