Pages

Tuesday, April 8, 2014

1983ம் ஆண்டை விட மிகப்பெரிய இனக்கலவரத்துக்கு சிலர் சதி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

Tuesday, April 08, 2014
இலங்கை::1983ம் ஆண்டு இனக்கலவரத்தை விடவும், மிகப்பெரிய இனக்கலவரமொன்றை ஏற்படுத்த சில சதிகள் முயற்சித்து வருவதாகக் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ‘கிறீஸ் பேய்’ களை உருவாக்கி அதன் மூலம் இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் வேலைகளும் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
 
தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய ஐக்கியத்திற்கான மாநாடு நேற்று திங்கட்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 20-20 கிரிக்கெட் போட்டியின் முடிவில் இலங்கை வெற்றிபெற்ற போது இன, மத, மொழி பேதமின்றி நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு ஆகிய பகுதிகளிலுள்ள அனைத்து மக்களும் பட்டாசுகளை கொளுத்தி வெற்றியைக் கொண்டாடினர்.
 
இது இன ஐக்கியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய ஐக்கியத்திற்கான மாநாட்டை நடத்துவதில் பெருமையடைகிறோம்.
 
மனித உரிமைகள் பிரகடனங்கள் முன்வைப்பதற்கு 2000 வருடங்களுக்கு முன்பே இலங்கையில் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் அன்பு காட்டும் கலாசாரம் பின்பற்றப்பட்டது. குறிப்பாக, இலங்கை ஆக்கிரமிப்புக்குட்பட்டபோதே இலங்கையின் மன்னர்கள் வேற்று இனத்தவர்களை காப்பாற்றியுள்ளனர்.
போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பின்போது முஸ்லிம் மக்களை காப்பாற்றி, அவர்களை கிழக்கில் குடியமர்த்த இலங்கையின் செனரத் மன்னன் உதவினார். இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் வளமான சிந்தனைகளையுடைய கலாசாரத்தை பின்பற்றுக்கின்றது. நாம் மனித உரிமைகளில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளோம்.
 
துட்டகைமுனு மன்னன் எல்லாளனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய போதும், எல்லாளனை கௌரவிக்கும் வகையில் சமாதியொன்றை அமைத்தார். அதேபோல், நாமும் கைதுசெய்யப்பட்ட புலிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்தோம். எவரையும் அடக்கி ஆட்சி செய்யவில்லை. சமாதானத்தையும், இன ஐக்கியத்தையும் போலியான செயற்பாடுகள் மூலம் கட்டியெழுப்ப முடியாது.
 
இணையதளங்களிலும், அலைவரிசைகளிலும் கூறுவதுபோல், உடனடியாக இன ஐக்கியத்தையும், தேசிய ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முடியாது. சிங்கள மக்கள் தமிழ் கற்க வேண்டும். தமிழ் மக்கள் சிங்களம் கற்கவேண்டும். இதற்கான அனைத்து செயற்திட்டங்களும் இவ்வரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
1915, 1958, 1983ம் ஆண்டுகளில் ஏற்பட்டதைவிட பெரிய கலவரமொன்றை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி செய்துவருகின்றன. கிரீஸ் பேய் என்று கூறி சிக்கல்களை ஏற்படுத்தி இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
 
ஆனால், இதன் உண்மை தன்மையை மக்கள் அறிவார்கள். நாம் அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசக்கூடிய சூழல் உருவாக வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் யார், யாரென நாசூக்காக இணங்கான வேண்டும். ஜெனீவாவில் என்ன நடந்தாலும் மனித நேயத்துடன் நாம் ஒன்றாக இன ஐக்கியத்துடனே வாழ்வோம் என்றார்.

No comments:

Post a Comment