Pages

Friday, February 7, 2014

இலங்கை இராணுவம் பிரேசிலில் பயிற்சிகளை மேற்கொள்ள வசதி!

Friday, February 07, 2014
இலங்கை::இலங்கை இராணுவத்தினர் பிரேசிலில் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரட்னாயக்காவுடன் பிரேசிலுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமாக சென்றிருந்த போது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் செல்சோ அமோரிம் உடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாகவே இந்த இராணுவப் பயிற்சி வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பதாக இராணுவ தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் பிரேசில் தேசிய போர்க் கல்லூரி, பிரேசில் ஆயுதப் படையினரின் உயர்கல்விப் பள்ளிகள், பிரேசில் அமைதிகாக்கும் நடவடிக்கைகள் நிலையம் மற்றும் கற்கைகள் மற்றும் காட்டு போர்முறை போதனை மையம் ஆகியவற்றிலேயே இலங்கையின் முப்படைகளினது அதிகாரிகளுக்கும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதாக பிரேசில் இராணுவம் இலங்கைக்கு உறுதியளித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரேசில் மற்றும் இலங்கை ஆயுத படையினருக்கான விரிவான இராணுவ பயிற்சிகளின் முக்கியத்துவம் மற்றும் போர்முறை, கடல்வழி போக்குவரத்து கட்டுப்பாடு, இந்து மற்றும் அட்லாண்டிக் சமுத்திர பிராந்தியங்களில் கூட்டு இராணுவப் பயிற்சி ஆகியவற்றில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் பிரேசில் பாதுகாப்பு அமைச்சரும், இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் இதன்போது ஏகமனதான இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், ரியோ டி ஜெனிரோ நகரில் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள பாதுகாப்பு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறும் பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் செல்சோ அமோரிம், பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேநேரம், பிரேசிலின் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளும் சாத்தியமான ஒத்துழைப்புகள் மற்றும் பரிமாற்றத் திட்டங்கள் பற்றி கலந்துரையாடும் பொருட்டு இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளை பிரேசிலுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
 

No comments:

Post a Comment