Saturday, January 4, 2014

அச்சுவேலி பிரதேசத்தின் அக்கரைக் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன!

Saturday, January 4, 2014
இலங்கை::வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அச்சுவேலி பிரதேசத்தின் அக்கரைக் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
 
இந்நிகழ்வு அக்கரைக் கிராமத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்ததரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த உதவிகளை வழங்கி வைத்தார்.
 
இதன்போது, கடந்த வருடத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட அந்த மக்கள் வீடுகளை அமைப்பதற்காக சீமெந்துப் பைக்கற்றுக்கள் மற்றும் தகரங்கள் என்பன வழங்கப்பட்டது. அத்தோடு அக்கிராமத்திற்கு தண்ணீர் தாங்கிகளும் வழங்கப்பட்டன.
 
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் மீள்குடியமர்ந்த மக்களுக்கு வீட்டுத் திட்ட உதவிகளை வழங்கி வைத்ததுடன், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் சிரமதானப் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.
 
கடந்த வருடத்தில் மீள்குடியமர்த்தப்ப்ட்ட இந்தப் பிரதேசத்தில் குடிமர்ந்திருக்கின்ற சுமார் 48 குடும்பங்களுக்கே அரசினால் இந்த உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று ஏனைய உதவிகளும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சில்வெஸ்டர் அலென்டின் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment