Saturday, January 18, 2014
வாஷிங்டன்::பல்வேறு நாடுகளின் இணைய தளங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்க உளவு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. தனக்கு மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளை கூட உளவு பார்க்கும் அமெரிக்காவின் இந்த ரகசிய திட்டத்தை அந்நாட்டின் மாஜி உளவு அதிகாரி ஸ்னோடன் அம்பலப்படுத்தினார். இதனால் பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.
பிரேசில் அதிபர் தில்மா, அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார். இதையடுத்து, அரசின் உளவுத் திட்டம் குறித்து மறு பரிசீலனை நடத்த அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். ஒரு மாதமாக பரிசீலனை நடந்து வந்தது. இந்நிலையில், வாஷிங்டன் நகரில் ஒபாமா நேற்று பேசியதாவது: நமது உளவு நடவடிக்கைகள் உலக அளவில் கவனம் பெற்றன. தேசிய பாதுகாப்பு நோக்கம் அல்லாமல், நெருங்கிய நட்பு நாடுகளின் தகவல் தொடர்புகளை நாம் கண்காணிக்க கூடாது என்று உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நாம் எந்த நாடுகளுடன் நெருங்கி பழகுகி றோமோ, எந்த நாடுகளின் ஒத்துழைப்பை சார்ந்திருக்கிறோமோ அவர்களுக்கு நம் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் நமது பாதுகாப்பு அமைப்பும் உளவு அமைப்பும் செயல்பட அறுவுறுத்தி உள்ளேன். ஆனால் எல்லா நாடுகளும் செய்வதை போல, அமெரிக்காவும் மற்ற நாடுகளின் நோக்கங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து திரட்டும் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

No comments:
Post a Comment