Pages

Saturday, January 18, 2014

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு விவகாரம் இந்தியா, சீனா, ரஷ்யா முத்தரப்பு பேச்சு வார்த்தை!

Saturday, January 18, 2014
பீஜிங்::ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு விவகாரம் குறித்து இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய 3 நாடுகளின் பேச்சுவார்த்தை சீனாவில் நடைபெற்றது.ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தலிபான் மற்றும் அல்கய்தா ஆதரவு தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அங்கிருந்து நேட்டோ படைகளை வாபஸ் பெறுவதென அமெரிக்காவும், இங்கிலாந்தும் முடிவு செய்துள்ளன. இதனையடுத்து விரைவில் ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு பிரச்னைகள் எழுந்துள்ளதாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் தெரிவித்து வந்தன.
 
எனவே ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களை கட்டுபடுத்தி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருவது குறித்து 3 நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்தன. இதனையடுத்து சீனாவில் பீஜிங் நகரில் நேற்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் 3 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சு வார்த்தையின் போது, ஆப்கானிஸ்தானுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை 3 நாடுகளும் சேர்ந்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளையும் மேம்படுத்த விரும்புவதாக சீன தரப்பில்
 
தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் சீன அரசு சுரங்கங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் சீன வெளியுறவு அதிகாரி லைசின்மின், ரஷ்ய அதிகாரி எவ்கெனி லுகியானோவ், இந்திய தரப்பில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் ஆகியோர் சாந்து கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment