Tuesday, October 22, 2013

தேசிய அடையாள அட்டை கிடைக்காத மாணவர்களை எழுத்துமூலம் அறிவிக்குமாறு கோரிக்கை!


Tuesday, October 22, 2013
இலங்கை::இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, இதுவரை அவை கிடைக்காவிடின் அது தொடர்பில் எழுத்துமூலம் அறியத்தருமாறு ஆட்பதிவுத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
உரிய வயதெல்லையை பூர்த்திசெய்த மாணவர்களின் அடையாள அட்டை தொடர்பில் மாத்திரமே, பாடசாலை அதிபர்கள் ஊடாக அறியத்தரப்பட வேண்டுமென ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ் சரத் குமார கூறியுள்ளார்.
 
உரிய தகுதிகளைக் கொண்ட சுமார் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரையில் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற 04 இலட்சம் விண்ணப்பங்களில், சில மாணவர்களின் விண்ணப்பங்கள் உரிய வயதெல்லையை கொண்டிராத காரணத்தினால் கிடப்பில் இருப்பதாகவும் ஆட்பதிவு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 
உரிய வயதெல்லையை கொண்ட சுமார் 65 ஆயிரம் மாணவர்களின் அடையாள அட்டைகள் விரைவில் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆர்.எம்.எஸ் சரத் குமார கூறியுள்ளார்.
 
அடையாள அட்டை கிடைக்காதவர்கள் 0112 59 36 34 என்ற திணைக்களத்தின் தொலைநகல் இலக்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைக்கும் பட்சத்தில், துரிதமாக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களில் எவரேனும் இதுவரையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காவிடின், தமது விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான வசதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில், 331 பிரதேச செயலகங்களிலும் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
குறித்த பிரிவுகளிலுள்ள அதிகாரிகள் விண்ணப்பங்களை பரிசீலித்ததன் பின்னர், அவற்றை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பார்கள் எனவும் ஆர்.எம்.எஸ் சரத் குமார மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment