Pages

Monday, October 28, 2013

பீகார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 13 பேர் கைது குக்கர் குண்டுகள் பறிமுதல்!

Monday, October 28, 2013
இலங்கை::பாட்னா:பீகாரில் நேற்று நரேந்திர மோடி பொது கூட்டத்தை குறிவைத்து 8 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த 13 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஒவ்வொரு மாநிலமாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பாட்னா ரயில் நிலையத்திலும், அதை தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற மைதானத்திலுமாக மொத்தம் 8 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

முதல் குண்டு, பாட்னா ரயில் நிலையத்தில் வெடித்தது. இதை தொடர்ந்து அங்கு போலீஸ் படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டி பிடித்தனர்.  அவரது பெயர் அன்சாரி என்பதும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் செல்போன் எதுவும் இல்லை. ஆனால், 12 பேரின் செல்போன் எண்களை ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்திருந்தார்.

அந்த செல்போன் நம்பர்களை வைத்து அய்னுல், அக்தர், கலீம் ஆகிய 3 பேரை பாட்னா ரயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் அய்னுல் குண்டுவெடிப்பில் சிக்கி பலத்த காயத்துடன் பிடிபட்டான். அவனது உடல்நிலை சீரியசாக உள்ளது. அன்சாரியிடம் கிடைத்த செல்போன் நம்பர்கள் குறித்து ராஞ்சி போலீசுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள துர்வா பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 3 பேரை பிடித்தனர். பீகாரில் மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மோடி கூட்டத்தில் குண்டு வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

உ.பி.மாநிலம், முசாபர்நகரில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் குண்டு வைத்ததாக தீவிரவாதிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பக்தல் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவனுடைய நெருங்கிய கூட்டாளி தெசின் அக்தர் தலைமையில் சதித் திட்டம் தீட்டி இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. இம்மாத துவக்கத்தில் அன்சாரியை சந்தித்த தெசின் அக்தர் அவரிடம் வெடிகுண்டுகளை அளித்துள்ளான். அன்சாரியும், மற்றவர்களும் சேர்ந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

புத்தகயாவில் கடந்த ஜூலையில் நடந்த குண்டுவெடிப்பிலும் இதே தீவிரவாதிகள்தான் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பீகார் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ராஞ்சியில் அன்சாரி வீட்டில் இருந்து குக்கர் வெடிகுண்டுகள், துண்டு பிரசுரங்கள், பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன’ என்றார்.

 முசாபர்நகர் மதகலவரத்துக்கு பிறகு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, இந்தியாவில் தனது செயல்பாடுகளை தீவிரபடுத்தியிருப்பதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி அண்மையில் ஒரு பொது கூட்டத்தில் பேசினார். இந்நிலையில், முசாபர்நகர் கலவரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாட்னாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment