Saturday, March 9, 2013

தி.மு.க., "பந்த்' : கட்சிகள் ஆதரவு இல்லை!

Saturday, March 09, 2013
சென்னை::இம்மாதம் 12ம்தேதி, தி.மு.க., அறிவித்துள்ள, "பந்த்' போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லை என்பதால், "பந்த்' போராட்டம் வெற்றி அடையாமல், பிசுபிசுத்து விடும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழர்களுக்கு நல் வாழ்வு கிடைக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இம்மாதம் 12ம்தேதி, "பந்த்' போராட்டத்தை தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்தார். இந்த போராட்டத்திற்கு, கட்சி சார்பற்ற முறையில், அனைத்து தரப்பினரும் சங்கடங்களைப் பொறுத்துக் கொண்டு, வெற்றி அடைய வைக்க வேண்டும் என, கருணாநிதி நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க., வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மத்திய அமைச்சர் குலாம்நபிஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சுதர்சனநாச்சியப்பன், சித்தன் ஆகியோர் டில்லியில் நேற்று நடந்த, "டெசோ' மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில் நடைபெறவுள்ள, "பந்த்' போராட்டத்தை, ஆதரிக்க முடிவு தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தி.மு.க., வின், "பந்த்' போராட்டத்தை, தே.மு.தி.க., ஆதரித்தால், லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அச்சரமாக அமைந்து விடும் என, கருதுவதால், அக்கட்சியின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கவில்லை. அதேசமயம், இம்மாதம் 13ம்தேதி, மகளிர் அணி சார்பில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி, மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். ம.தி.மு.க., தரப்பில், "பந்த்' போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2009ம் ஆண்டு முத்துக்குமார் உடலுக்கு எரியூட்டப்பட்ட, ஜனவரி 31ம்தேதி, தமிழகத்தில், "பந்த்' நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அப்போது, "பந்த்' நடத்தினால், பாதுகாப்புச் சட்டம் பாயும் என, போலீசார் மூலம் தி.மு.க., அரசு மிரட்டியது. கருணாநிதி இப்போது, "பந்த்' அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது' எனக் கூறியுள்ளார்.

இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் ஜவஹர் அலி வெளியிட்ட அறிக்கையில், "கருணாநிதிக்கு உண்மையில் இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்காவிட்டால், மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை தி.மு.க., வாபஸ் பெறும் என்று மட்டும் சொல்லட்டும். அடுத்த நிமிடமே மத்திய அரசு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என, கருணாநிதிஅறிவித்து விடுவார். இதை செய்யாமல், 12ம்தேதி, "பந்த்' என,அறிவித்திருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது' எனக் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும், "பந்த்' போராட்டத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது குறித்த முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. தொழிற்சங்கங்கள் அமைப்புகள் வலுவாக அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தி.மு.க., தரப்பில் எழுந்துள்ளது. ஆளுங்கட்சி மற்றும் இதர கட்சிகளின் ஆதரவு, "பந்த்' போராட்டத்திற்கு இல்லை என்பதால், "பந்த்' போராட்டம் பிசுபிசுத்து விடும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் மன்றம் அறிவிப்பு:

டெசோ அமைப்பு, வரும் 12ம் தேதி நடத்தும், "பந்த்'தில் பங்கேற்போம்,'' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார். இது குறித்து, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,"குறிப்பிட்ட அமைப்பில், அதிகளவு உறுப்பினர்கள் கிடையாது. எனவே, இந்த அறிவிப்பால், அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆசிரியர்களின் வருகை, எந்த விதத்திலும் பாதிக்காது' என, தெரிவித்தன.

No comments:

Post a Comment