Saturday, March 09, 2013
புதுடில்லி::இலங்கை தமிழர் பிரச்னையில், அரசியல் ரீதியான நல்லிணக்கம் எட்டப்பட, மத்திய அரசு துணை நிற்கும். அதற்காக, இலங்கை அரசு, அந்நாட்டு தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார்.ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:
நாட்டின் உறுதிப்பாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது பயங்கரவாதம்; அதை ஒழிக்க, அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். மத்திய அரசுடன், மாநில அரசுகளும் துணை நிற்க வேண்டும்.
என்.சி.டி.சி., எனப்படும், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த அமைப்பு தொடர்பாக, மாநில அரசுகள் தெரிவிக்கும் குறைகள் களையப்பட்டு, அமைப்பு உருவாக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கை
களுக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கும்.ஜம்மு - காஷ்மீரில் நிலவி வரும் சூழ்நிலைகளை, மத்திய அரசு உரிய முறையில் அணுகும். தேசிய நலனுக்கு உகந்ததாகவே அரசின் நடவடிக்கைகள் இருக்கும். எக்காரணம் கொண்டும், காஷ்மீர் மக்களின் விருப்பதிற்கு மாறாக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.விவசாயத் துறையில் போதிய அளவில் வளர்ச்சி இல்லை என, எம்.பி.,க்கள் குறைபடுகின்றனர். கடந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில், விவசாயத் துறைக்கு நிறைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனால்தான், வீழ்ச்சிபாதையில் இருந்த நிலைமாறி, 3.7 சதவீத அளவுக்கு வளர்ச்சி உள்ளது. இதற்கு முன், 2.4 சதவீதம் முதல், 2.5 சதவீதம் வரையே விவசாயத் துறையில் வளர்ச்சி இருந்தது.சில மாநிலங்கள் ஒட்டு மொத்த வளர்ச்சியில் முன்னேறிச் செல்கின்றன; இது, வரவேற்கத்தக்கது. குறிப்பாக பீகார், மத்திய பிரதேசம் போன்ற
மாநிலங்கள், விவசாய துறையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம், மீண்டும், 7 முதல், 8 சதவீதத்துக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது."அண்டை நாடுகளுடன், நம்நாடு போதிய நட்புறவுடன் இல்லை' என, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி குறிப்பிட்டார். அண்டை நாடுகளுடன் நட்பை பேணும், அதே நேரத்தில், மிகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியுள்ளது; நம் நாட்டு நலன்களை, எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள முடியாது.இலங்கையை பொறுத்தவரை, அங்குள்ள நிலைமைகள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவசியம். அதற்காக, இலங்கை அரசுடன் இணைந்து, எல்லாவித நல்லெண்ண நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது.இலங்கையில் நிலவும், தமிழர் பிரச்னைக்கு, அரசியல் ரீதியான தீர்வு காண, மத்திய அரசு துணை புரியும். அது சாத்தியமாக வேண்டுமெனில், இலங்கை அரசும், அங்குள்ள தமிழர் கட்சித் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து, அந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படாதவகையில், பேச்சு நடத்த வேண்டும்.
தமிழர்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், சம உரிமைகளுடன் கூடிய வாழ்க்கை பெறுவதற்கு மத்திய அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்கும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
அவர் பேசி முடித்தவுடன், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி எழுந்து, ""ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், நிலவும் ஊழல்கள் அனைவரும் அறிந்ததே. எனவே, அவை பற்றி, பிரதமர் தன் உரையில் ஏதாவது குறிப்பிடுவார் என, எதிர்பார்த்தேன். அதை தொடாமலேயே தவிர்த்து விட்டார்,'' என்று குற்றம் சாட்டி அமர்ந்தார்.

No comments:
Post a Comment