Tuesday, March 19, 2013
புதுடில்லி::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யுத்தக் குற்றவாளியாக அறிவிக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக பிரகடனப்படுத்துமாறு திராவிட முன்னேற்றக் கழகம் கோரி வருகின்ற போதிலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் எனவும் திராவிட முன்னேற்றக் கழகம் கோரி வருவதாகவும், இதனை தமது கட்சி ஆதரிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வாழ் தமிழர்களின் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி கவிழப் போவதாகவும், அதன் ஆரம்ப கட்டங்களே தற்போது தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment