Pages

Saturday, March 16, 2013

இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுக்க உண்ணாவிரதம் நீடிப்பு : கல்லூரிகளை மூடினாலும் போராட்டம் தொடரும் மாணவர் போராட்ட குழு அறிவிப்பு!

Saturday, March 16, 2013
சென்னை:இலங்கைக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல், சட்ட, பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரிகளை மூடினாலும் போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் பரவியது.

கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு தொடர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைகளில் சேர்த்து வருகின்றனர்.பல இடங்களிலும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இதையடுத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்க நேற்று மாலை வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியார் கலை, பொறியியல், சட்டக் கல்லூரிகளுக்கு இன்று முதல் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. விடுதிகளில் தங்கி படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் மாதிரி தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த தேர்வும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்குள் கல்லூரி விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். நேற்று மாலையே பெட்டி, படுக்கைகளுடன் மாணவ, மாணவிகள் விடுதியை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ்செல்வியிடம் கேட்டபோது, “தற்போது நிலவி வரும் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றார். கல்லூரிகள் மூடப்பட்டது குறித்து தமிழீழத்துக்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறியதாவது: கல்லூரிகளை மூடுவதால் எங்களின் போராட்டத்தை நிறுத்திவிட முடியாது.

கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் அறிவித்தபடி போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதியில் போராட்டம் நடத்தப்படும். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படும். சென்னையில் முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்வது, அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த போராட்டத்தில் பங்கேற்க இதுவரை 17 கல்லூரிகள் ஒருங்கிணைந்துள்ளன. எனவே, நிச்சயமாக மாணவர் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். மாணவர்கள் போராட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment