Pages

Thursday, March 7, 2013

இலங்கை தமிழர் விவகாரம் குறித்து, லோக்சபாவில் இன்று விவாதம் நடத்த, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது!

Thursday, March 07, 2013
புதுடில்லி:.இலங்கை தமிழர் விவகாரம் குறித்து, லோக்சபாவில் இன்று விவாதம் நடத்த, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் நேற்று, பூஜ்ய நேரத்தின்போது, இலங்கை தமிழர் பிரச்னையை, அ.தி.மு.க., - எம்.பி., தம்பி துரை எழுப்பினார். "மனித உரிமைகளை மீறியது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும்' என, தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.

இதன்பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது: ஜனாதிபதி உரையில், இலங்கை தமிழர் பிரச்னை குறித்த, எந்த விஷயமும் இடம் பெறாதது, ஏமாற்றம் அளிக்கிறது. மத்திய அரசின் இந்த நிலையால், தமிழர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி, எங்களை (தி.மு.க.,) தவிக்க விட்டு விட்டது. போர்க்குற்றத்தில் ஈடுபட்டதுடன், மனித உரிமைகளையும் மீறிய இலங்கை அரசுக்கு எதிராக, பொருளாதார தடை விதிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாஜ்பாய் தலைமையிலான அரசு, பதவியில் இருந்தபோது, பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவுக்கு எதிராக, பொருளாதார தடை விதிக்கப்பட்டது. எனவே, இலங்கைக்கு எதிராக, பொருளாதார தடை விதிப்பதில், தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

இளங்கோவன் பேசியபோது, தமிழகத்தை சேர்ந்த காங்., எம்.பி.,க்கள்,"பிரபாகரன் தலைமையிலான,  புலிகள் அமைப்பு, ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்தது' என்றனர்.

இதைத் தொடர்ந்து, இளங்கோவன் பேசியதாவது: முன்னாள் பிரதமர்கள், இந்திரா, ராஜிவ் போன்றோர், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான கொள்கைகளை செயல்படுத்தினர். அந்த நடைமுறையிலிருந்து, விலகிச் செல்ல வேண்டும் என, நீங்கள் விரும்புகிறீர்களா? தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும், 13வது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, இலங்கையிடம், இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என, இலங்கை தெரிவித்து உள்ளது. இதை, இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். இவ்வாறு, இளங்கோவன் பேசினார். இதைத் தொடர்ந்து, பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர், கமல் நாத் கூறுகையில்,""இலங்கை தமிழர் பிரச்னை குறித்து,  (இன்று) சபையில் விவாதம் நடத்த, திட்டமிடப்பட்டு உள்ளது,'' என்றார்.

பிரதமர் பதில்:

இறுதியாக, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டும் என, இலங்கை அரசிடம் வலியுறுத்தப்படும். தமிழர்கள், சம உரிமையுடனும், கவுரவமாகவும் வாழ்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கையிடம் வலியுறுத்தப்படும். ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தின் மீது, இந்தியாவின் நிலை என்ன என்பது பற்றி, தற்போது முடிவு செய்ய முடியாது. தீர்மானத்தின் இறுதி வடிவத்தை படித்த பின்பே, இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.

இதற்கிடையே, பார்லிமென்ட்டுக்கு வெளியில், மத்திய வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறியதாவது: அனைத்து தரப்பினரும் ஏற்க கூடிய, ஒரு தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து, அமெரிக்காவிடம் ஆலோசனை நடத்தும்படி, இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மனித உரிமை பிரச்னைகளை, மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்; கவுரவ பிரச்னையாக கருதக் கூடாது. எனவே, அமெரிக்காவுடன், நேரடியாக பேச்சு நடத்தி, ஏற்றுக் கொள்ளத் தக்க தீர்வு காண வேண்டும் என, இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.

No comments:

Post a Comment