Pages

Thursday, March 7, 2013

ஐதராபாத்தில் மீண்டும் குண்டு வெடிக்கும் ஆபத்து..!

Thursday, March 07, 2013
சித்தூர்::ஐதராபாத்தில் இன்னும் 48 மணி நேரத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கலாம். எனவே யாரும் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத் தில்சுக் நகரில் கடந்த 21 ம் தேதி அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 16 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சைக்கிளில் டிபன் பாக்ஸ் குண்டு வைத்து வெடிக்க செய்தது தெரியவந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல்குருவை தூக்கில் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதலில் இந்தியன் முஜாஹீதின் அமைப்பு ஈடுபட்டிருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. தாக்குதல் நடந்த இடத்தை பிரதமர் மன்மோகன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். குண்டுவெடிப்பில் காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறினர். படுகாயமடைந்தோர் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உளவுத் துறையினர் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். புனே குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான இம்ரான், அப்துல் ஆகிய இருவரையும் உளவுத் துறை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். ஐதராபாத்தில் மக்கள் அதிகமாக நடமாடும் 12 இடங்களில் மீண்டும் குண்டுவைத்து தகர்க்க திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இம்ரான், அக்பர் ஆகியோரை 2 நாட்களுக்கு முன்பு உளவுத் துறை அதிகாரிகள் ரகசியமாக ஐதராபாத் அழைத்து வந்துள்ளனர்.

குண்டு வைக்க திட்டமிட்ட இடங்களை அடையாளம் காட்டுமாறு கூறினர். அவர்களும் அடையாளம் காட்டியதாக தெரிகிறது. இதனிடையே 5 நாள் விசாரணை முடிந்ததும் தீவிரவாதிகள் 2 பேரும் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மத்திய உளவுபிரிவு போலீசார் ஆந்திர மாநில உள்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பிக்கும் நேற்று காலை அவசர கடிதம் ஒன்று அனுப்பி உள்ளனர். அதில் இன்னும் 2 நாட்களில் ஐதராபாத் நகரில் அதிகமாக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

நகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உளவுதுறை, விஜிலென்சு, சிறப்பு போலீஸ் படை, ஆயுதப் படை போலீசார் என அனைவரும் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ், ரயில் நிலையங்கள், சட்டசபை வளாகம், பிலிம் சிட்டி, வணிக வளாகங்கள், முக்கிய கோயில்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் கருவி மற்றும் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர வாகன சோதனைகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான புது நபர்கள் யாராவது சுற்றித் திரிந்தால் உடனடியாக காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தரும் படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஐதராபாத் மற்றும் செகந்தராபாத் நகரங்களில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment