Tuesday, February 19, 2013
திருச்சி::பழைய துணி வியாபாரத்துக்கு இலங்கை சென்ற திருச்சி வாலிபரை, கஞ்சா பதுக்கிய சந்தேக வழக்கில் அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். "என் கணவரை மீட்டுத்தர வேண்டும்' என, அந்த வாலிபரின் மனைவி கலெக்டரிடம் நேற்று முறையிட்டார்.
திருச்சி, இ.பி., ரோடு, அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராம்குமார், 32. இவருக்கு, நித்யா, 25, என்ற மனைவியும், மணிகண்டன், 4, ஹர்ஷிணி, 2, என்ற குழந்தைகளும் உள்ளனர். ராம்குமாரும், சின்னக்கடை வீதி, அரபிக்குளத் தெருவைச் சேர்ந்த சீனி (என்ற) ஸ்ரீனிவாசனும் நண்பர்கள். இருவரும் பழைய துணிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சீனியின் நண்பர்களான ராஜூ, தமிழ், தர்மா ஆகிய, மூவரும் ராம்குமாருக்கு அறிமுகமாகினர். "இலங்கைக்கு சென்று வியாபாரம் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்' என்று கூறியுள்ளனர். இதை நம்பிய ராம்குமார், அவர்களுடன், டிச., 18ம் தேதி இலங்கை சென்றார்.
கொழும்பில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் தங்கி, பழைய துணி வியாபாரம் செய்தார். 26ம் தேதி காம்ப்ளக்ஸில் ரெய்டு செய்த போலீஸார், அந்த காம்ப்ளக்ஸில் பதுக்கி வைத்திருந்த, 35 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, ராம்குமார் உள்பட, நான்கு பேரை போலீஸார் கைது செய்து, சந்தேக வழக்கு பதிவு செய்தனர். ராம்குமாரை தவிர, மற்ற அனைவரும் வெளியே வந்தனர். ராம்குமார் மட்டும் சிறையில் உள்ளார். அவரை அழைத்துச் சென்ற தமிழ், ராஜூ, தர்மர் ஆகியோர் இந்தியா திரும்பினர். இதுபற்றி ராம்குமார் குடும்பத்தாருக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. ஜன., 3ம் தேதி ராம்குமார், தன் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின், ராம்குமாரை இலங்கை அழைத்துச் சென்ற, "குருவி' தமிழிடம் கேட்டபோது, நடந்ததை கூறியுள்ளார். ஆனால், இதுவரை ராம்குமாரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராம்குமார் தங்கியிருந்த காம்ப்ளக்ஸ் உரிமையாளர், ராம்குமாரை வெளியே எடுக்க உதவி செய்வதாகவும், தமிழ், ராஜூ ஆகிய இருவர், இலங்கை வந்தால் தான், ராம்குமாரை வெளியே எடுக்க உதவுவதாகவும், அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். அங்கு சென்றால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக கருதும், தமிழ், ராஜூ
ஆகியோர், அங்கு செல்ல மறுக்கின்றனர். இதில் ஒருவர் தன்னை வற்புறுத்தினால் தற்கொலை செய்து கொள்வதாக, ராம்குமார் குடும்பத்தாரை மிரட்டியுள்ளார். இதனால், ராம்குமார் மனைவி நித்யா மற்றும் அவரது குடும்பத்தார் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நித்யா, நேற்று மனு அளித்தார். அப்போது, அவருடன் வந்த ராம்குமார் அண்ணன் முருகன் கூறியதாவது: குருவியாக சென்று வந்த ராஜூ, தமிழ், தர்மர் ஆகிய மூவர் தான், என் தம்பியை அழைத்துச் சென்றனர். அவர்கள் சென்றால் தான், என் தம்பியை மீட்க முடியம் என்ற நிலை உள்ளது. முதல் முறையாக இப்போது தான் என் தம்பி சென்றார். அங்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அதற்குள் இப்படியாகி விட்டது. அங்கிருந்த கஞ்சாவுக்கும், அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலெக்டர் தான் இதில் உரிய நடவடிக்கை எடுத்து, என் தம்பியையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment