Pages

Tuesday, February 19, 2013

சம்பள தினத்தில் டாஸ்மாக்கை மூட வேண்டும் : ஆர்ப்பாட்டத்தில் ஞானதேசிகன் பேச்சு!

Tuesday, February 19, 2013
சென்னை::சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, கோவிந்தசாமி, வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த தலைவர் குமரிஆனந்தன், முன்னாள் எம்எல்ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, வசந்தகுமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா மற்றும் சைதை ரவி, மயிலை பெரியசாமி, சிரஞ்சீவி, வில்லிவாக்கம் சுரேஷ், நிசார், ஆயிரம் விளக்கு ரஞ்சன்குமார், வடசென்னை ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பூரண மதுவிலக்கு இருந்தது.

1983ல் இருந்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு தற்போது 6,500க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் வந்தாலும், இந்த நிதி ஆதாரத்தை வேறு வழியில் பெற முயற்சிக்க வேண்டும். இந்த வருமானம் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு உதவாது. மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் சம்பளம் தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். சம்பள பணமாவது, வீட்டிற்கு போய் சேர உதவும். எனவே, பூரண மதுவிலக்கை நோக்கி தமிழக அரசு படிப்படியாக செல்ல வேண்டும். அரசியல் வேறுபாடுகளை கலைந்து பூரண மதுவிலக்கை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகள் கைகோர்க்க வேண்டும். எங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், மதுவிலக்கை அமல்படுத்துவதில் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார். மதுவிலக்கை வலியுறுத்தி சென்னை கலெக்டரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment