Tuesday, February 19, 2013
சென்னை::மாநகராட்சி சார்பில் சென்னையில் 15 இடங்களில் மலிவு விலை உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். இந்த கடைகளில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ரூ.5க்கும் விற்கப்படுகின்றன. சென்னையில், மாநகராட்சி மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் 13ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒரு உணவகம் என்ற வீதத்தில் 15 உணவகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மலிவு விலை உணவகங்கள் இன்று திறக்கப்பட்டன.
சாந்தோம் பத்திரப் பதிவு துறை தலைவர் அலுவலகம் அருகில் மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள உணவு கூடத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் பங்கேற்றனர். மலிவு விலை உணவகத்தில் ஒரு இட்லி (100 கிராம்) ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் (350 கிராம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் (350 கிராம்) 3 ரூபாய்க்கும் கிடைக்கும். காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி கிடைக்கும்.
மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தயிர் சாதம், சாம்பார் சாதம் கிடைக்கும். வாரத்தின் 7 நாட்களும் இந்த உணவு கூடங்கள் திறந்திருக்கும். ஆனால், உணவு கூடங்களில் மட்டுமே இட்லி, சாம்பார், தயிர் சாதம் வழங்கப்படும். பார்சல் கிடையாது. உணவு கூடத்தில் அந்தந்த பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் 10 முதல் 12 பேர் பணியாற்றுவார்கள். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சம்பளம் வழங்கப்படும். இன்று முதல் திறக்கப்பட்டுள்ள மாநகராட்சி உணவகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து படிப்படியாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளிலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் 15 இடங்கள்
1. மாநகராட்சி வணிக வளாகம், திருவொற்றியூர்
2. மாநகராட்சி கட்டிடம், மாத்தூர்,
3. சமூக நலக் கூடம், சூரப்பட்டு
4. மாநகராட்சி கட்டிடம், பழைய வண்ணாரப்பேட்டை
5. மாநகராட்சி கட்டிடம், பிராட்வே.
6. பழைய மண்டல அலுவலகம், புளியந்தோப்பு
7. மாநகராட்சி கட்டிடம், ஒரகடம்
8. பழைய மண்டல அலுவலகம், கீழ்பாக்கம்
9. மாநகராட்சி கட்டிடம், சாந்தோம்
10. மாநகராட்சி கட்டிடம், தியாகராய நகர்
11. மாநகராட்சி கட்டிடம், மதுரவாயல்
12. மாநகராட்சி கட்டிடம், நங்கநல்லூர்
13. மாநகராட்சி கட்டிடம், திருவான்மியூர்
14. வணிக வளாகம், பெருங்குடி
15. குடிசை மாற்று வாரிய தொழிற்பயிற்சி கூடம், துரைப்பாக்கம்.

No comments:
Post a Comment