Wednesday, February 20, 2013
இலங்கை::தான் இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவோ, உயிரிழந்துள்ளதாகவோ அல்லது அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி. பி. சி. க்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் இராணுவத்தில் இருந்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு விடயம் தொடர்பிலும் சட்ட பூர்மான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி பிரித்தானியா மற்றும் இந்திய செய்திப் பத்திரிகைகள் ஆகியவற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியாகியிருந்த பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழப்பதற்கு முன்னரான புகைப்படங்கள் தொடர்பாக பி. பி. சி. சிங்கள சேவை கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பி. பி. சி. சிங்கள சேவையின் கேள்விகளுக்கு பதிலளித்த சரத் பொன்சேகா மேலும் தெரிவிக்கையில் ;
2009 மே 19 ஆம் திகதி 10 மணிக்கு யுத்தம் நிறைவடைந்தது. ஆனால். அக்காலப்பகுதியில் பாலச்சந்திரன் உயிரிழந்ததாகவோ அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை. பிரபாகரனின் மூத்த மகன் சார்ல்ஸின் சடலம் கிடைத்தது என்பதே உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.
இவ்வேளை இது தொடர்பான விசாரணைகளுக்கு முகம் கொடுக்கத் தயாரா என பி.பி. சி. ஊடகவியலாளர் கேட்டபோது, தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் இராணுவத்தில் இருந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பாகவும் சட்ட பூர்வமான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்கத் தயாராகவிருப்பதாக பொன்சேகா பதிலளித்தார்.

No comments:
Post a Comment