Wednesday, February 20, 2013
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவையொட்டி, ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க, இன்று முதல், பிப்., 24 வரை, தடை விதிக்கப்படுவதாக, மீன் துறையினர் அறிவித்துள்ளனர். கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா, பிப்., 23, 24ம் தேதிகளில் நடக்கிறது. விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, 3,000த்திற்கும் மேற்பட்டோர், ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் செல்ல உள்ளனர். பக்தர்களுடன் சமூகவிரோதிகள் ஊடுருவாமல் தடுக்க, இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை, தமிழக கடலோர காவல் படையினர், கடலில் ரோந்து பணியை தீவிரப்படுத்த உள்ளனர். இவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இன்று முதல், பிப்., 24 வரை, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள், கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என, ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்...
படகில் கூடுதல் மீனவர்கள்: இந்திய கடற்படை அதிர்ச்சி: அபராதம் விதிக்க பரிந்துரை!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில், இந்திய கடற்படையினர் மீன்பிடி படகை சோதனையிட்ட போது, ஒரு படகில் கூடுதல் மீனவர்கள் இருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.
ராமேஸ்வரத்தில், 700க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள், வாரத்திற்கு மூன்று நாள்கள், மீன் பிடிக்க செல்கின்றனர். இலங்கைக்கு போதை, எரிப்பொருள் கடத்துவதை தடுக்கவும், தேச விரோத சக்திகள் ஊடுருவாமல் தடுக்கவும், படகுகள் கடலுக்கு செல்லும் போதும், மீன்பிடித்து விட்டு திரும்பும் போதும், ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படையினர், சோதனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு படகிலும், மீன் துறையினர் அனுமதித்த, ஐந்து மீனவர்கள், பெயர் விவரம் டோக்கனில் குறிப்பிட்டுள்ளதா என, ஆய்வு செய்வர். அதன்படி, நேற்று, ராமேஸ்வரம் கரை திரும்பிய படகுகளை, இந்திய கடற்படையினர் சோதனையிட்ட போது, தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜோஸ்வா என்பவர் படகில், ஆறு மீனவர்கள் இருந்தனர். மேலும், டோக்கனில் பெயர் விவரமும் இல்லை. இதனால், அந்த படகையும், மீனவரையும் கடற்படையினர், மீன் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். "அப்படகில் இருந்தவர் மீனவர் தான்; மற்றொரு படகில் இருந்த அவரை, உதவிக்காக ஏற்றி வந்தோம்' என, மீனவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, மீன் துறையினர், அந்த மீனவர்களுக்கு அபராதம் விதிக்க, ராமநாதபுரம் மீன் வளத்துறை துணை இயக்குனருக்கு பரிந்துரைத்தனர்.

No comments:
Post a Comment