Saturday, April, 07, 2012பெங்களூரு::நாங்கள் எண்ணெய் ஆய்வு மேற்கொண்டுள்ள தென்சீன கடல் பகுதி, தனிப்பட்ட எந்த நாட்டுக்கும் சொந்தமானது அல்ல. அது, உலக நாடுகளின் சொத்து. இந்த விஷயத்தில், இந்தியாவுக்கு எந்த ஒரு நாடும் மிரட்டல் விடுக்க முடியாது,'' என, இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, சீனாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆய்வுப்பணி: சீனாவின் தெற்கு கடல் பகுதியில் உள்ள சில தீவுகளை, தனக்கு சொந்தமானது என, சீனா கூறி வருகிறது. பிலிப்பைன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளும், இந்த பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில், வியட்னாமுடன் இணைந்து, இந்தியா, எண்ணெய் ஆய்வுப் பணிகளை நடத்தி வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "எங்களுக்கு சொந்தமான கடல் பகுதியில், எண்ணெய் ஆய்வுப் பணி மேற்கொள்ள, இந்தியாவுக்கு உரிமை இல்லை. உடனடியாக அங்கிருந்து வெளியேறாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்' என, இந்தியாவுக்கு, சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
பதிலடி: இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா நேற்று கூறியதாவது: வியட்னாமுடன் இணைந்து, நாங்கள் எண்ணெய் ஆய்வு நடத்தும் கடல் பகுதி, எந்த ஒரு தனிப்பட்ட நாட்டுக்கும் சொந்தமான பகுதி அல்ல. உலக நாடுகளுக்கு சொந்தமான பகுதி. இந்த விஷயத்தில், எந்த ஒரு தனிப்பட்ட நாடும், இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்க முடியாது. வர்த்தக பயன்பாடு தொடர்பான விஷயத்தில் ஆய்வு நடத்துவதில், எந்த ஒரு நாடும் தலையிட முடியாது. வர்த்தக பயன்பாட்டுக்காக, இந்த கடல் பகுதியைப் பயன்படுத்தலாம் என்பதை, அனைத்து ஆசிய நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த விவகாரத்தால், இந்தியா - சீன நாடுகளுக்கு இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
No comments:
Post a Comment