Tuesday, April 10, 2012டமாஸ்கஸ்::சிரியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்கள், புரட்சி படையை சேர்ந்தவர்கள் உள்பட 105 பேர் பலியாயினர். சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 13 மாதங்களுக்கு மேலாக மக்கள் புரட்சி நடைபெற்று வருகிறது. போராடும் மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இதை முடிவுக்கு கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபை சமரச திட்டத்தை உருவாக்கியது. அதில், நகர பகுதிகளில் இருந்து ராணுவத்தினரை இன்றைக்குள் வாபஸ் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை அதிபர் ஆசாத் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சிரியா முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று நடந்த சண்டையில் 105 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இவர்களில் 23 பேர் பாதுகாப்பு வீரர்கள், 8 பேர் புரட்சி படையை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பொதுமக்கள் என அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹமா மாகாணம் லடாம்னா கிராமத்தில் ராணுவத்துக்கும், புரட்சியாளர்களுக்கும் நடந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் பலியாகி உள்ளனர். இதுபோல தால் ரிபாத் நகரில் ஏற்பட்ட வன்முறையில் பொதுமக்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ஐ.நா. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment