Tuesday, April 10, 2012

திருப்போரூர் பகுதியில் தொடரும் திடீர் மரணங்களால் மக்கள் பீதி!

Tuesday, April 10, 2012
திருப்போரூர்::திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த முறை முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா வருகை தந்தார். அப்போது கோயிலுக்கு புதிய மரத்தேர் வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ரூ.30 லட்சம் செலவில் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டது. கடந்த 2004 முதல் ஆண்டு தோறும் மாசி மாதம் பிரம்மோற்சவத்தின்போது மாடவீதிகளில் தேரோட்டம் நடந்து வந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 4 ம் தேதி தேரோட்டம் நடந்தது.

தேர்திருவிழா முடிந்தவுடன் தேர் இரும்பு தகடு கொண்ட கூரையால் மூடி வைக்கப்படும். ஆனால் இதுவரை தேர் மூடி வைக்கவில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இந்த பணி பாதியில் நிற்கிறது.
இந்த நிலையில் மார்ச் 22ம் தேதி கந்தசாமி கோயில் ஆதீனமாக இருந்த சிதம்பர சிவஞான சுவாமிகள் திடீரென இறந்தார். மார்ச் 26ம் தேதி கிழக்கு மாடவீதியில் வசித்த வியாபாரிகள் சங்க செயலாளர் ரமேஷ் குமார் (45) திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அடுத்த மூன்று நாளில் வணிகர் தெருவில் வசித்த ஜோதிடர் ஒருவரின் 5 வயது பேரன் இறந்தான். அதற்கு இரண்டு நாள் கழித்து தெற்கு மாடவீதியில் வசித்த மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் விஜயகுமார் (35) இறந்தார். அதேபோல் தெற்கு மாடவீதியில் வசித்த பேரூராட்சி கவுன்சிலர் சந்திரனின் தாயார் இறந்து போனார். இந்த நிலையில் நேற்று பேரூராட்சி கவுன்சிலர் அய்யம்பேட்டை தெருவை சேர்ந்த மாலதியின் சகோதரர் கதிர்வேல் இறந்தார்.

திருப்போரூர் பகுதியில் ஏற்பட்டு வரும் திடீர் தொடர் மரண சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். முருகன் கோயில் தேரை, தேரோட்டம் முடிந்து 7 நாட்களுக்கு மேலாகியும் அரைகுறையாக மூடி வைத்தது தெய்வ குற்றமாகிவிட்டது என்ற வதந்தியும் மக்களிடையே பரவியுள்ளது. இந்த மரண சம்பவங்கள் ஏதேச்சையாக நடந்திருந்தாலும் திருப்போரூர் பகுதியில் பரவியுள்ள தகவலால் பயந்துபோன மக்கள், இதற்கு பரிகாரம் செய்ய வேண்டும், கோயில் தேரை உடனடியாக மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment