Pages

Monday, February 6, 2012

மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்: கூடங்குளம் அணுமின் திட்டம் பாரதிய ஜனதா ஆதரவு!

Monday, February 06, 2012
சென்னை::மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு, கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தியை தொடங்க வேண்டும்’’ என்று பாஜ வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ தேசிய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், சென்னையில் தமிழக பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான பணிகள் பல ஆண்டுகளாக நடந்து முடிந்துள்ளது. மின் உற்பத்தியை தொடங்கும் நிலையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல், இந்த பிரச்னையை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறது. இதனால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது. மின்சாரமும் தேவை, அணு மின் உலையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே, அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் மக்களின் அச்சத்தைப் போக்கி விட்டு, அணுமின் உற்பத்தியை தொடங்க வேண்டும். காலதாமதம் செய்யக் கூடாது.

வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கிறீர்கள். யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். பாஜவுக்கும், அதிமுகவுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்தொற்றுமை உள்ளது. இரண்டு கட்சி எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக சில நேரங்களில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டிருந்தால் 2 மாநிலங்களுக்கு இடையில் இந்த அளவுக்கு பதற்றம் ஏற்பட்டிருக்காது. இரு மாநில அரசுகளையும் பேச வைத்து பிரச்னையை தீர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2ஜி வழக்கில் 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, தவறு நடந்துள்ளது உறுதியாகிறது. அப்போதைய அமைச்சர் ஆ.ராசா மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகிறதோ, அதே தவறை அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் செய்துள்ளார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment