Pages

Monday, February 6, 2012

அரசாங்கம் முயற்சிக்கவில்லை - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

Monday, February 06, 2012
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை என பிரதான எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ளதாக அந்தக் கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மட்டத்தில் இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளை செயற்படுத்துவதாக அரசாங்கம் கூறிவந்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் அது குறித்து மௌனம் சாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவில் நிருவாகத்தை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டிய தேவையுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் கருத்து வெளியிடுகையில், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கான வசதிகளை வழங்க வேண்டிய தேவை காணப்படுவதாக கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களை பரிசீலித்து தமது அறிக்கையை வெளியிட்டுள்ளதாக விஜித்த ஹேரத் கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் சிவில் நிருவாகத்தை ஸ்தாபித்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாமையே இந்த நிலைமை ஏற்படுவதற்கான காரணம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சிகள் சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் வினவியபோது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment