Pages

Monday, February 6, 2012

ரூ.10 லட்சம் மோசடி வழக்கு ராவணன் ஜாமீன் மனு தள்ளுபடி!

Monday, February 06, 2012
கோவை::சிறுமுகை கான்ட்ராக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் ராவணனின் ஜாமீன் மனு கோவை கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த கான்ட்ராக்டரை ஏமாற்றி ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சசிகலா உறவினர் ராவணன் கைது செய்யப்பட்டார். இவர் மீது நில அபகரிப்பு, பணம் பறிப்பு என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த வழக்கில் கோவை செசன்ஸ் கோர்ட்டில் ராவணன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஆதிநாதன் முன்பு ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் இன்னும் 2 பேரை கைது செய்ய வேண்டி உள்ளது. புகார்தாரரின் ரூ.10 லட்சம், அவரை மிரட்ட பயன்படுத்திய கத்தி மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டி உள்ளது. இவர் அரசியல் செல்வாக்குடன் இருந்ததால், அதை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க வேண்டி உள்ளது. மாநிலம் முழுவதும் அவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. எனவே, ஜாமீனில் விடக்கூடாது‘ என எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராவணன் வக்கீல், ‘இது பொய் வழக்கு, புகார் தாமதமாக கொடுத்துள்ளனர். கைது செய்தபோது ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு விட்டதால் திரும்பவும் போலீஸ் காவலில் விசாரிக்க தேவை இல்லை. எனவே, ஜாமீனில் விடுவிக்க வேண்டும்‘ என வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராவணன், திருப்பூர் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் கைதாகி, சென்னை கொண்டு செல்லப்பட்டார். அங்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment