Pages

Thursday, December 18, 2014

ஆளில்லா விண்கலம் சோதனை வெற்றி விண்ணில் பாய்ந்தது: ஜிஎஸ்எல்வி எம்கே-3 இஸ்ரோ புதிய சாதனை: பிரதமர் வாழ்த்து!

Thursday, December 18, 2014
சென்னை::ஆளில்லா விண்கலம் சோதனை வெற்றி விண்ணில் பாய்ந்தது: ஜிஎஸ்எல்வி எம்கே-3 இஸ்ரோ புதிய சாதனை: பிரதமர் வாழ்த்து!
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எம்கே 3 என்ற அதிக எடை கொண்ட நவீன ராக்கெட் மூலம் ஆளில்லா விண்கலம் இன்று காலை 9.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ புது சாதனை படைத்துள்ளது. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இஸ்ரோ இதுவரை ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் மட்டுமே செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி ஆய்வு செய்து வருகிறது. விண்ணுக்கு மனிதனை அனுப்பி ஆய்வு செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. ஆளில்லா விண்கலத்தை இஸ்ரோ தற்போது 2வது முறையாக ஜிஎஸ்எல்வி எம்கே-3 என்ற ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்துள்ளது.இதற்கு முன் எஸ்.ஆர். இ-1  ((space capsule Recovery Experiment) என்ற 550 கிலோ எடையுள்ள ஆளில்லா விண்கலத்தை பி.எஸ்.எல்.வி-சி7 ராக்கெட் மூலம் இஸ்ரோ கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அனுப்பியது. அந்த விண்கல கேப்சூல் புவியை வட்டபாதையில் சுற்றியபின் 12 நாட்கள் கழித்து வங்க கடலில் விழுந்தது.

அதை கடற்படை கப்பல் மீட்டது.  இந்நிலையில் இன்று 2வது முறையாக ஆளில்லா விண்கலம் ஜிஎஸ்எல்வி எம்கே - 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் பாய்ந்த 30வது நிமிடத்தில், அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் விழும்படி செய்யப்பட்டது.இதுகுறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது;இந்திய விண்வெளி ஆய்வு கழகத்திற்கு இது மிகவும் சிறப்பான நாள். ஜிஎஸ்எல்வி எம்கே-3 எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதாவது ராக்கெட்புறப்பட்டவுடன் 126 கி.மீ. இலக்கை 5 நிமிடம் 1 வினாடியில் அடைந்து மீண்டும் 14 நிமிடங்கள் 9 வினாடிகளில் கடலில் விழுந்தது. இந்த ஆளில்லா விண்கலம் விழுந்த இடத்தை சென்சார் கருவி உதவியுடன் அடையாளம் கண்டுள்ளோம். ஏற்கனவே கடற்பரப்பில் தயாராக நிறுத்தப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் உதவியுடன் அந்த விண்கலம் மீட்கப்படும். அடுத்தாண்டு மார்ச் மாதம் ஐஆர்என்எஸ்எஸ் டி4 செயற்கை கோள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் 3 அடுக்கு கொண்டது. எஸ் 200 என்ற முதல் இரண்டு அடுக்கில் 110 வினாடி எரிய

கூடிய திட மற்றும் திரவ பொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது. இதன் எடை 200 டன் ஆகும். மூன்றாவதாக எண் 110 என்ற அடுக்கில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த மூன்று அடுக்கும் விண்ணில் செல்ல செல்ல அதன் பணிகளை சரியான இலக்குகளில் செய்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சி-25 என்ற முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தால் ஆன கிரையோஜனிக் இன்ஜினும் பொருத்தப்பட்டு இருந்தது. மூன்று பேர் தங்குவது போன்று கேர் மாடல் மாதிரியும் இந்த விண்கலத்துடன் இணைக்கப்பட்ட்டிருந்தது. இதில் மனிதன் உயிர்வாழ்வதற்கான அனைத்து அம்சங்களும் பொருத்தப்பட்டிருந்தது. இதன் மொத்த எடை 3,735 கிலோ ஆகும். இது 2.7 அகலமும், 3 மீட்டர் உயரமும் கொண்டது.

இது கடலில் விழும் போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த 2 பாராசூட்களும் பொருத்தப்பட்டு இருந்தன. ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இந்த வரிசையில் இணைய தற்போது இந்தியா முதல்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. பிரதமர் வாழ்த்துஜிஎஸ்எல்வி ராக்கெட்  வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பது நமது விஞ்ஞானிகளின் மதிநுட்பம் மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும். அவர்களின் உழைப்புக்கு எனது வாழ்த்துக்கள்’’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment