Wednesday, October 08, 2014
இலங்கை::இலங்கையில் புலிகளுடன் போர் நடைபெற்ற போது தற்போது சிரியா மற்றும் ஈராக்கில் காணப்படும் நிலைமைகளுக்கு இணையான நிலைமையே இலங்கையிலும் காணப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச இணக்கப்பாடுகள் மற்றும் அதனுடன் இணைந்த இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஜெனிவாவுக்கான இலங்கையில் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஆரியசிங்க,
இலங்கையில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவ்வாறான நிலைமையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்கும் தேவை உள்ளது எனக் கூறியுள்ளார்.
அதேவேளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சார்பில் விசாரணைக் கூட்டத்தில் உரையாற்றிய, சசிகலா பிரேமவர்தன, புலிகளின் உறுப்பினர் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்றிணைந்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் பல நாடுகளில் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
அங்கு உரையாற்றிய பல நாடுகளில் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கடும் கேள்விகளை விடுத்தடுத்தனர்.
குறிப்பாக இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்தும் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் வெள்ளை வான் கடத்தல் உட்பட பலவந்தமாக காணாமல் போக செய்தல் பரவலாக நடப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே இலங்கையில் நடக்கும் காணாமல் போகும் சம்பவங்கள், சித்திரவதைகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை தொடர்பாக தெளிவுப்படுத்துவதற்காக சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று காலை ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் கூட்டம் ஒன்றையும் நடத்தியது.
மனித உரிமை சபையின் கூட்டத் தொடருடன் நடைபெறும் கருத்தரங்கில் இலங்கையை சேர்ந்த 8 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நோலிய கொடவின் மனைவி சந்தியா ஹெக்நேலிய கொட, திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவரின் தந்தையான மருத்துவர் மனோகரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment