Pages

Friday, October 17, 2014

75 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்கடிதம்!

Friday, October 17, 2014
சென்னை::இலங்கை கடற்படை பிடித்து வைத்துக் கொண்டு விடுவிக்க மறுக்கும் தமிழக மீனவர்களின் 75 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக நிகழ்ந்து வரும் ஆபத்தான சூழ்நிலையை உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். இலங்கை கடற்படையின் வஞ்சகமான, பழிவாங்கும் நடவடிக்கையால் தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை சுட்டிகாட்டி எங்களது மதிப்பிற்குரிய தலைவர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார்.
பாக் வளைகுடா பகுதியில் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தொழிலுக்காக மீன்பிடிக்கும்போது அவர்கள் படகுகளுடன் பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. பிடித்து செல்லப்படும் படகுகளை விடுவிக்காமல் இலங்கை அரசு தீய, கெட்ட எண்ணத்துடன் செயல்படுகிறது. பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டு எடுப்பதில் தமிழக அரசு உறுதியுடன் உள்ளது.
காலம் காலமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வந்த கச்சத்திவை மீட்டு எடுப்பதிலும் உறுதியாக இருக்கிறோம். இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லை விவகாரம் முடிந்து போன ஒன்றாக மத்திய அரசு கருதக்கூடாது. 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழக அரசும், ஜெயலலிதாவும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார்கள்.
கடந்த 8.10.2014 அன்று நான் எழுதிய கடிதத்தில் இலங்கை கடற்படை பிடித்து சென்ற 24 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அவர்கள் தொடர்ந்து இலங்கை சிறையில் உள்ளனர். கூடுதலாக, தற்போது தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 75 படகுகள் 2014 மே மாதத்திற்கு பின்னர் இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்டு, தொடர்ந்து அவர்களின் வசம் உள்ளது. இலங்கை தரப்பானது வேண்டுமென்றே, தீய நோக்கத்துடன் கடுமையான நிலைபாட்டை எடுத்து, படகுகளை விடுவிக்க முடியாது தீவிரமான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள்.
நீண்ட காலமாக படகுகள் விடுவிக்கப்படாமல் இருப்பதால் மீனவர்களின் குடும்பங்கள் மிகவும் சோகத்துடனும், சொல்லொண்ணா துயரத்துடனும் இருப்பதாக அவர்களை பிரதிநிதித்துவபடுத்தும் மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் வர இருக்கும் தீபாவளி பண்டிகையானது அவர்களுக்கு இருண்டதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் மாறப்போகிறது. தங்களது படகுகள் விடுவிக்கப்படாத விஷயத்தை மத்திய அரசிடம் உடனடியாக எடுத்து செல்லுமாறு என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்பிரச்சினையில் விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகளுக்காக அதிக பணம்  செலவழித்துள்ளனர். இலங்கை, தமிழக கடலோரங்களில் விரைவில் தொடங்க உள்ள  வடகிழக்கு பருவ மழையால், அந்த விலை உயர்ந்த படகுகள் சேதம் அடையக்கூடும்.
தற்போது  தமிழக மீனவர்களின் 75 படகுகளும் வெட்ட வெளியில் கிடக்கின்றன. முறைப்படி  பராமரிக்கப்படாமல் உள்ள அந்த படகுகளை உடனே திருப்பித் தராவிட்டால் அவை  மீண்டும் பயன்படுத்த முடியாதபடி பாதிக்கப்படலாம். இப்போது கூட அந்த  படகுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அழிவை நோக்கி சென்று  கொண்டிருக்கின்றன. மழைக்காலத்தில் அதிகமாக வீசும் காற்றால் விலை உயர்ந்த  அந்த படகுகள் மேலும் பாதிப்படையக்கூடும்.
எனவே தமிழக மீனவர்களின் 75  படகுகளையும் உடனே விடுவிக்க செய்ய உரிய அமைச்சகத்துக்கு விரைவில் உத்தரவு  பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தங்களுக்கு  வருவாயை ஈட்டித்தரும் வாழ்வாதாரமான படகுகளை இழந்துள்ளதால் தமிழக மீனவர்  குடும்பங்கள் வருமானம் இல்லாமல் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள்  கடும் சோர்வான நிலையில் இருக்கிறார்கள்.
எனவே இந்த விவகாரத்தில்  தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தமிழக மீனவர்களின் 75 படகுகளை உடனே  விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களை மன்றாடிக் கேட்டுக்  கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment