Sunday, October 5, 2014

லிபியாவில் கார் குண்டு தாக்குதலில் 36 வீரர்கள் பலி!

Sunday, October 05, 2014
பெங்காஸி::லிபியாவின் பெங்காஸி நகர விமான நிலையம் அருகே ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 36 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து சிறப்பு படை பிரிவு செய்தி தொடர்பாளர் கூறியதாவது,
 
பெங்காஸி விமான நிலையம் அருகே பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் நிகழ்ந்த சண்டையை தொடர்ந்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய மூன்று கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 36 வீரர்கள் உயிரிழந்தனர். விமான நிலையம் அருகே ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்ற போது வெடிபொருள் நிரம்பிய இரு கார்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். விமான நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட மற்றோர் கார் குண்டு தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்தனர் என்றார் அவர்.
 
லிபியாவில் அதிபர் கடாபியின் சர்வாதிகார ஆட்சியை நேட்டோ உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கவிழ்த்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டில் நடைபெற்ற பொது தேர்தலில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. அந்த நாடாளுமன்றத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளன. எனினும் தலைநகர் திரிபோலியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆயுத குழுக்களும், பெங்காஸி நகரின் பெரும்பகுதியை கைப்பற்றியிருக்கும் பயங்கரவாதிகளும் புதிய அரசை எதிர்த்து போராடி வருகின்றனர். பெங்காஸியில் பாதுகாப்பு படையினர், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பயங்கரவாதிகளார் கொல்லப்படுவது அண்மை காலமாக தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment