Wednesday, October 15, 2014
சென்னை::அதிமுகவினரின் வன் முறையால் ரூ.200 கோடி மதிப்பிலான பொது சொத்துகள் சேதமடைந்தது. அதை அதிமுக பொதுச் செயலாளரிடம் இருந்து வசூலிப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட அன்று முதல் தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தது. தமிழகம் முழுவதும் கலவரங்கள், போராட்டங்கள், வாகன எரிப்புகள், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
எதிர்கட்சியின் அலுவலகங்கள் தாக்கப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்தாமல் போலீசார் வேடிக்கை பார்த்தனர். அதிமுகவினர் செய்த இந்த வன்முறை சம்பவங்கள் அனைத்தும் புகைப்படம் மற்றும் வீடியோ படம் எடுக்கப்பட்டது.
அதிமுகவினரால் சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளன. இது அந்த கட்சியிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டும்.
இதுசம்பந்தமாக, பொதுச் சொத்து சேதம் தடுப்புச் சட்டம் மற்றும் அது தொடர்புடைய சட்டப் பிரிவுகள், உச்ச நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில் நஷ்டஈட்டை, அதிமுக பொது செயலாளரிடம் இருந்து வசூலிக்கும்படி தமிழக அரசு மற்றும் போலீசிடம் கடந்த 28ம் தேதி மனு கொடுத்தேன்.
சேத தொகையை அவரிடம் இருந்து வசூலிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து, மனுதாரர் கொடுத்துள்ள மனுவை ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தவிட்டு மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.

No comments:
Post a Comment